புலியின் வாயைப் பிடிக்காமல் வாலைப் பிடித்தவர் அண்ணன் செல்லூர் ராஜூ: தங்கம் தென்னரசு பேச்சால் சிரிப்பலை

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுபுலியின் வாயைப் பிடிக்காமல் வாலைப் பிடித்தவர் அண்ணன் செல்லூர் ராஜூ: தங்கம் தென்னரசு பேச்சால் சிரிப்பலை

மதுரையில் மாட்டைத்தான் பிடிப்பார்கள்; ஆனால் அண்ணன் செல்லூர் ராஜூ புலியைப் பிடித்துள்ளார். அவரின் வீரம் புலியின் வாயைப் பிடிக்காமல் வாலைப் பிடித்தன் மூலம் தெரிகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதால் சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வினா விடை நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ’’மதுரைக்கு எந்தவிதமான தொழிலும் இல்லை,மெட்ரோ ரயில் வருகிறது என்கிறீர்கள் அதற்கான பூர்வாங்க பணிகளை எல்லாம் மேற்கொள்கிறார்கள். எந்த தொழிலும் இல்லாமல் மெட்ரோ வந்து என்ன செய்ய? எல்லோரும் பாராட்டும் வகையில் கொண்டு வர வேண்டும் ‘’ எனக் கோரிக்கை விடுத்தார்.

அப்போது குறுக்கீட்டு பேசிய சபாநாயகர் அப்பாவு, ‘’10 ஆண்டுகள் அமைச்சராக இருந்துள்ளீர்கள், ஒன்றும் இல்லை என்கிறீர்கள், இந்த அமைச்சராவது செய்கிறாரா எனப் பார்ப்போம்’’ என்றார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘’உள்ளபடியே அண்ணன் செல்லூர் ராஜூவைப் பார்த்து தமிழக மக்கள் ஆகா, ஓஹோ எனச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மதுரை மண்ணின் வீரம், மாடுதான் பிடிப்பார்கள் என நீங்கள் அனைவரும் பார்த்து இருப்பீர்கள். அண்ணன் செல்லூர் ராஜூ புலி வாலை பிடித்து வந்தார்.

புலியின் வாய் இருக்கும் பக்கம் நிற்காமல் திறமையாக வால் இருக்கிற பக்கமாக நின்றார். தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மதுரைக்கு டைடல் பூங்கா ரூ.600 கோடியில் முதலமைச்சர் அறிவித்துள்ளார். தொழில் முதலீடுகள் தென் மாவட்டங்களை நோக்கி வரத்தொடங்கியுள்ளன. அதில் நிச்சயம் மதுரையும் முக்கியத்துவம் பெறும்’’ என்றார். அமைச்சரின் பேச்சு சட்டமன்றத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in