அண்ணாமலையின் காலம் தமிழக பாஜகவுக்கு போதாத காலம்!

திமுகவுக்கு வந்த பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் சிவபாலன் பேட்டி
அமைச்சர் மனோ தங்கராஜுடன் சிவபாலன்
அமைச்சர் மனோ தங்கராஜுடன் சிவபாலன்

பாஜக ஓபிசி அணியின் மாநில செயலாளர் சிவபாலன், அண்மையில் பாஜகவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு திமுகவில் ஐயக்கியமானார். பாஜகவினர் தங்கள் பரமவைரியாக நினைக்கும், அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையிலேயே சிவபாலன் தன்னை திமுகவில் இணைத்துக்கொள்ள, குமரி பாஜக முகாம் கொந்தளிபானது. காரணம், சிவபாலன் ஆர்எஸ்எஸ் வார்ப்பு! பொன்.ராதாகிருஷ்ணனின் நிழலாகவும் வலம்வந்தவர்.

தமிழகத்தில் பாஜக ஆழமாக வேரூன்றி இருக்கும் குமரி மாவட்டத்திலிருந்து அக்கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர் கொள்கை முரண் கொண்ட திமுகவில் ஐக்கியமானது பாஜக மட்டத்தில் பெரும் சலனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சிவபாலனிடம் காமதேனுவுக்காக பேசியதிலிருந்து...

அண்ணாமலையுடன் சிவபாலன்
அண்ணாமலையுடன் சிவபாலன்

தொடர்ச்சியாக பலரும் கட்சியைவிட்டு வெளியேறும் அளவுக்கு தமிழக பாஜகவில் அப்படி என்ன தான் பிரச்சினை?

2002 காலக்கட்டத்தில் இருந்தே பாஜகவில் பயணிக்கிறேன். 21 வருட பயணம் இது. 2011 வரை மாணவர் அமைப்பான ஏபிவிபி, ஆர்எஸ்எஸ் அமைப்புகளில் வேலைசெய்தேன். படிப்பு முடித்தபின்பு முழுநேரமாகவே கட்சிவேலைதான் செய்தேன். என் கடன் பணிசெய்து கிடப்பதே என்பதுதான் நோக்கமே தவிர, வேறு சிந்தனையே இல்லை. கொடுத்த வேலை எதுவாக இருந்தாலும் அதைத் திறம்படச் செய்வேன். அது கட்சிக்கும் தெரியும். அதனால்தான் இளைஞரணியின் மாவட்டத் தலைவர், இளைஞரணியின் மாநிலச் செயலாளர், மாநிலத் துணைத்தலைவர், ஓபிசி அணியின் மாநிலச் செயலாளர் என படிப்படியாக வளர்ந்தேன்.

முன்பெல்லாம் பாஜகவில் பொறுப்பு வாங்கவேண்டும் என்றால் கட்சிக்காக அவர் கொடுத்த உழைப்பு, சீனியாரிட்டி எல்லாம் பார்ப்பார்கள். அப்படியானவர்கள் யாரும் இல்லை என்றால் தான் புதியவர்களுக்கு பதவி கொடுப்பார்கள். ஆனால் அண்ணாமலை வந்தபின்பு, அவருக்குப் பின்னால் கட்சிக்கு வந்தவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் கொடுக்கப்பட்டது. என் அணியிலேயே புதிதாக மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவருக்கு மாநிலப் பொதுச் செயலாளர் பதவிகொடுத்து அவருக்கும் கீழே என்னைக் கொண்டு வந்தனர். கிளைக்கழகத்தில் ஆரம்பித்து படிப்படியாக இந்த இடத்திற்கு வந்த என்போன்ற பலருக்கும் இதெல்லாம் நெருடலை உருவாக்கியது. அமைப்பு ரீதியாக நான் பலம் வாய்ந்தவன். ஆனால் புதிதாக வந்தவர்கள், அரசியல் அனுபவத்தில் நம்மைவிடக் குன்றியவர்கள். அவர்கள் பூத்தில் எப்படி பணியாற்ற வேண்டும் என எங்களைப் போன்றவர்களுக்கு வகுப்பெடுக்கும்போது வருத்தம் வருவது இயல்புதானே?

புதியவர்களுக்கு பதவி கொடுப்பது கட்சி வளர்ச்சிக்கும் உதவும் தானே?

முன் கள அனுபவம் உள்ளவர்களாக இருந்தால் பரவாயில்லை. அவர்கள் வார்டிலேயே, பூத்திலேயே நூறுவாக்குக்கூட பெற்றுத்தர முடியாதவர்கள் சொல்லும்போது ஏற்படும் வலியை உங்களால் உணரமுடியாது. இதை மேல்மட்ட நிர்வாகிகளிடம் சொல்லியும் கேட்கவில்லை.

அண்ணாமலை புதியவர்களுக்கு பதவி கொடுத்தது மட்டும் தான் சிக்கலா... கட்சிக்கு உழைக்கும் சீனியர்களை எப்படி நடத்துகிறார்?

அதற்கு அவர்விட்ட ஒரு அறிக்கையே பதில் சொல்லும். ஒருமுறை பேசும்போது சொன்னார். “பஸ்ஸில் பயணிப்பவர்கள் டிக்கெட் எடுத்துவிட்டால் நிறுத்தம் வரும்போது இறங்கத்தான் வேண்டும். கட்சியிலும் அப்படித்தான். பல வருடங்களாக பணிசெய்பவர்கள் உங்களால் முடியவில்லை என்றால் ஒதுங்கிவிடுங்கள்” என சொல்லியிருந்தார். “சிலநேரங்களில் டிரைவரையே மாற்றினால் தான் வாகனம் வேகமாக ஓடும்” என்றெல்லாமும் பேசினார். சீனியர்களை அண்ணாமலை எப்படி மதிக்கிறார் என்பதற்கு இதெல்லாமும் உதாரணம்.

அணி மாறும் படலம் இன்னும் தொடருமா?

உண்மையாகவே நான் இதுவரை யாரையும் அழைக்கவில்லை. நான் கட்சி மாறியது தெரிந்து ஓபிசி அணியின் பல மாவட்ட நிர்வாகிகளும் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார்கள். எங்களையும் அழைத்திருக்கலாமே என சொன்னதில் இருந்தே அவர்களின் வலியையும் புரிந்துகொள்ள முடிந்தது. பாஜகவில் இருந்து இன்னும் பலர் வெளியேறுவார்கள். ஏனென்றால் கட்சிக்காக உழைத்து உருக்குலைந்தவர்களின் வேதனைக்குரல் அங்கு அதிகம்.

முன்பு பாஜகவில் களப்பணியாளர்களுக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும். வசதி, வாய்ப்புகளையெல்லாம் பார்க்க மாட்டார்கள். ஆனால் இப்போது, அங்கே சூழல் அப்படி இல்லை. மாதம் ஒரு லட்சம் செலவு செய்யும் நபரே சிறு நிர்வாகப் பொறுப்புக்கும் வர முடியும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

பாஜகவில் இருந்து விலகிய பலரும் அதிமுகவில் இணைந்த நிலையில், நீங்கள் கொள்கை முரண்பாடு கொண்ட திமுகவில் இணைந்தது ஏன்?

நான் வசிக்கும் குமரி மாவட்டத்தில் திமுக ஆட்சியில் தான் பல இந்து ஆலயங்களின் புனரமைப்பு நடந்துள்ளது. 425 ஆண்டுகளுக்குப் பின்பு திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் திமுக ஆட்சியில் நடந்துள்ளது. குமரி மாவட்ட கோயில் கும்பாபிஷேகம், திருப்பணிகளுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுகவில் 80 சதவீத நிர்வாகிகள் இந்துகள்தான். அவர்கள் பயணிக்கும் கட்சியாகவும் திமுக இருக்கத்தானே செய்கின்றது. கோயில்களுக்கு திமுக ஆட்சி கொடுக்கும் முக்கியத்துவம் அவர்களை நோக்கி என்னை இழுத்தது.

குமரி மாவட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜுக்கு எதிராகத்தான் பாஜக அரசியல் செய்கிறது. ஆனால், அவர் முன்னிலையிலேயே நீங்கள் திமுகவில் இணைந்திருக்கிறீர்கள். இதில் ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா?

நானும் அவரை பலமுறை கடுமையாக விமர்சித்துள்ளேன். அரசியல், கட்சி என வரும்போது அது தவிர்க்க இயலாதது. திமுக நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் என் மீது பல வழக்குகளும் உள்ளது. ஆனாலும் அமைச்சர் மனோ தங்கராஜ் அதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ளவில்லை. ஜனநாயக அடிப்படையில் எதிர்குரலுக்கும் மதிப்புக் கொடுக்கக்கூடிய ஜனநாயகவாதியாகத் தெரிந்தார். அதனால் அவர் முன்னிலையிலேயே திமுகவில் இணைந்துவிட்டேன்.

பாஜக முகாமில் உங்களை இப்போது அர்ச்சித்துக் கொட்டுகிறார்களே கவனித்தீர்களா..?

பலகட்டங்களில் எனக்கு நெருக்கடி இருக்கும்போது மூத்த நிர்வாகிகளிடம் தான் முதலில் சொன்னேன். ஆனால், அண்ணாமலையே முடிவு எடுக்கும் ஒற்றைப்புள்ளியாக மாறியதால் எங்கள் குரல் வலுப்பெறவில்லை. அங்கே உள்கட்சி ஜனநாயகம் தோற்றுப்போய்விட்டது. மொத்தத்தில் அண்ணாமலையின் காலம் தமிழக பாஜகவுக்கு போதாத காலம்.

ஒருவர் கட்சியை விட்டுச் செல்லும்போது சமூகவலைதளத்தில் வாழ்த்துச் சொல்கிறார் அண்ணாமலை. அதுதான் வெளியில் தெரிகிறது. பின்னால் அவர் என்ன சொல்வார் எனத் தெரியாது. என்னையும் மிகவும் அவதூறாக சமூகவலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். என் மனைவி பற்றிக்கூட அவதூறாகப் பதிவு போடுகின்றனர். தேசபக்தர்களுக்கு அழகு இதுவா?

நான் கிறிஸ்தவப் பெண்ணைக் காதலித்து மணந்தவன். குமாரகோவில் முருகன் கோயிலில் வைத்து இந்து முறைப்படி என் திருமணம் நடந்தது. தமிழிசை செளந்தர்ராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக மூத்தவர்கள் எனது திருமணத்தில் கலந்து கொண்டனர். பொன்.ராதாகிருஷ்ணன் தான் தாலி எடுத்துக் கொடுத்தார். திருமணத்திற்குப் பின்பு என் மனைவி இந்துவாக மாறினார். இப்போது இந்து மத பிடிப்போடு அவர் உள்ளார். இதையெல்லாம் நேற்றுவரை மெச்சிய பாஜக நண்பர்கள், இப்போது என் மனைவி கிறிஸ்தவர் என புதிதாக கண்டுபிடித்தது போல் பதிவிடுகின்றனர்.

உங்கள் மீது அம்பை எய்த பின்புதான் இது மதவாதமாக தெரிகிறதா?

திருமணம் ஆகி ஆறு ஆண்டுகள் ஆகிறது. நேற்றுவரை அவர்களுக்கு சகோதரியாக தெரிந்த என் மனைவி, இப்போது கிறிஸ்தவராகத் தெரிகின்றார். நான் அரசியலில் இருப்பதனால் இதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால், என் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரால் தான் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. இத்தனைக்கும் என் குடும்பமே பாஜக தான். குமரி மேற்கு மாவட்டத்தில் எங்கள் குடும்பத்தைச் சார்ந்த பலரும் பாஜகவில் பொறுப்பில் உள்ளனர். என் குடும்பத்தில் இருந்து பாஜகவை விட்டு உதறிய முதல்நபர் நான் தான். இந்துக்களுக்கு திமுக செய்திருக்கும் பணிகளை பிரச்சாரம் செய்வதையே இலக்காகக் கொண்டு இனி பயணிக்க உள்ளேன்.

திமுகவில் உங்கள் பங்களிப்பு எப்படி இருக்கும்?

இந்து இளைஞர்களை நோக்கிச் செல்வேன். திமுக இந்து விரோத இயக்கம் அல்ல என்பதை அவர்களிடம் எடுத்துச் சொல்வேன். மாற்றுக் கட்சியில் இருந்து இப்போதுதான் இணைந்து உள்ளேன். திமுக தலைமை என்ன உத்தரவிட்டாலும் நிறைவேற்றுவேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in