அண்ணாமலையின் ’அண்ணா’ கடிதங்கள்!

தமிழகத்தில் தாமரையைத் தழைக்கச் செய்வாரா?
அண்ணாமலை
அண்ணாமலை
அண்ணாமலை கடிதம் 9
அண்ணாமலை கடிதம் 9

நாடெல்லாம் கிளை பரப்பி வெற்றி நடைபோடும் ஒரு நிறுவனம், சில மாநிலங்களில் மட்டும் பெரும் பின்னடைவைச் சந்திக்கும். எத்தகைய முயற்சிகளை எடுத்தாலும் அங்கே அந்த நிறுவனம் நிமிராது. ஆனாலும், மற்ற ஊர்களின் வெற்றியைவிட இங்கே கால் பதிப்பதுதான் எங்கள் லட்சியம் என்று தொடர்ந்து நிர்வாகிகள் மல்லுக்கட்டுவார்கள். அரசியலைப் பொறுத்தவரை, பாஜக அப்படி பிரம்மப் பிரயத்தனம் செய்யும் மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு.

1951-ல் பாரதிய ஜன சங்கமாக தோன்றி, 1980-ல் பாரதிய ஜனதா கட்சியாக மாறிய அக்கட்சி, நேரடியாகவும், தனது பரிவார அமைப்புகளின் மூலமும் பல்வேறு களப்பணிகளைச் செய்ததன் விளைவு, இப்போது பாஜகவின் இலக்கு நோக்கிய பாதையில் இருந்த படுகுழிகளும், தடைகளும், முட்களும் நீங்கியிருக்கின்றன. பாஜகவால் ரதம் அல்ல, கட்ட வண்டி கூட ஓட்ட முடியாமல் இருந்த ஒரு மாநிலத்தில், ஜிப்ஸி ஜீப்பில் ஜிவ்வென பறக்கிறார் தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை.

"தமிழகத்தில் தாமரை... இப்போது இல்லை என்றால்... எப்போதும் இல்லை" என்கிற இக்கட்டான சூழலில், தமிழகத்தில் கட்சியை வளர்ப்பதற்காக இளைஞரும், ஐபிஎஸ் பணியில் இருந்து விலகியவருமான அண்ணாமலையைத் தலைவராக்கியது பாஜக தலைமை. தமிழ்நாட்டு மக்களிடம் பாஜக தொடர்பாக பதிவாகியிருக்கும் மனநிலையை மாற்றி, அவர்களை அக்கட்சியை நோக்கி ஈர்க்கவும், மூத்த தலைவர்கள் கோலோச்சுகிற தமிழ்நாட்டு அரசியலில் இளைஞர்களின் பிரதிநிதியாகப் பம்பரமாகப் பணியாற்றவும், காலத்துக்கேற்ற புதுப்புது வியூகங்களை வகுக்கவுமே அவருக்குத் தலைவர் பொறுப்பை வழங்கியது பாஜக.

அண்ணாமலை அதிரடி

கே.நாராயண ராவ், விஜயராகவலு, கே.என்.லட்சுமணன், கிருபாநிதி, இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் போன்ற பழந்தலைவர்களையே பார்த்த பாஜகவுக்கு, அண்ணாமலை முற்றிலும் புதுமுகம். கட்சிக்கு வந்த கையோடு, மாநிலத் துணை தலைவராக நியமிக்கப்பட்ட அவர், அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்டபோதே மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தார். 68 ஆயிரத்து 553 வாக்குகளைப் பெற்று வெற்றிவாய்ப்பை இழந்தாலும், அந்தத் தேர்தலில் கொடுத்த உழைப்பை, அதற்குப் பின்னரும் கட்சிப் பணிகளுக்காக தினந்தோறும் கொடுத்துவருகிறார் அண்ணாமலை.

இதுவரையில் இருந்த தலைவர்களுடன் ஒப்பிடுகையில், அதிகமான சுற்றுப்பயணம், ஏராளமான கூட்டங்கள், நிகழ்ச்சிகள் என்று சுறுசுறுப்பாக இயங்குவதால், மூத்த தலைவர்களுக்கும் அண்ணாமலையைப் பிடித்திருக்கிறது. திராவிடக் கட்சிகளின் பாணியில், கட்சிப் பத்திரிகையான 'ஒரே நாடு' மாலை நாளிதழில் சமீப காலமாகத் தொண்டர்களுக்குக் கடிதம் எழுதுகிறார் அண்ணாமலை. செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கி தினம் ஒரு கடிதம் என்று போட்டுத் தாக்குகிறார்.

"பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே... அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே..." என்று தொடங்கும் அந்தக் கடிதம், "அன்புச் சகோதரன்... உங்க 'அண்ணா' என்று முடிகிறது. இந்த 'அண்ணா' எங்கேயோ இடிக்கும் என்று தெரியும். தெரிந்தே அவர் செய்யும் இந்த சில்மிஷத்தை கட்சியினர் ரசிக்கிறார்கள். இன்றைய அரசியல்வாதிகளில் மு.க.ஸ்டாலின், மருத்துவர் ராமதாஸ், வைகோ, திருமாவளவன் போன்றோரே தொண்டர்களுக்கென கடிதம் எழுதுகிறார்கள். ஆனால், அண்ணாமலையின் கடிதம், சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு கிராமம் வரைக்கும் போகிறது.

அதில் பிரபலமான கடிதத்தின் வரிகள் இவை...

"ஆளும் கட்சியைவிட அசுர வேகத்தில் நம்மால் மக்கள் பணி செய்ய முடியும். ஒவ்வொரு மாவட்டத் தலைவரும் உங்கள் பகுதியின் பிரச்சினைகளைக் கையில் எடுங்கள். ஒரு பட்டியல் தயார் செய்யுங்கள். ஒவ்வொன்றாகத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். என் உதவியோ, மாநிலப் பொறுப்பாளர்களின் உதவியோ, மத்திய தலைமை உதவியோ எது, எப்போது தேவைப்பட்டாலும் கேளுங்கள். உடனே கிடைக்கும்.

அலுவலகத்தில் அமர்ந்துகொண்டு அரசியல் செய்ய முடியாது என்பதால்தான் மக்களை நோக்கி மாவட்ட வாரியாக என் பயணத்தைத் தொடங்கி இருக்கிறேன். மக்களுடன் இணைந்து இருப்பதுதானே அரசியல்.”

அண்ணாமலை கடிதம் 12
அண்ணாமலை கடிதம் 12

இன்னொரு கடிதத்தில், "நான் சிங்கமும் இல்லை... ஆட்டுக்குட்டியும் இல்லை. நான் அண்ணாமலை. என்னை நீங்கள் பெயர் சொல்லி, அண்ணா போகலாமா என்ற கேட்டால்கூட உங்களுடன் சேர்ந்து கட்சிப்பணி செய்ய நான் ரெடி. நீங்க ரெடியா?" என்ற அவரது அறைகூவல், கட்சிக்காரர்களைத் தாண்டியும் பலருக்குப் பரப்பப்பட்டிருக்கிறது.

சரி, இதைப் பற்றி பிற கட்சித் தலைவர்கள் என்ன நினைக்கிறார்கள்?

“பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்கும்போது தமிழ்நாட்டிலும் வலுவாக இருப்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறதே அன்றி, உண்மையான பலத்துடன் பாஜக ஒரு காலமும் இங்கே இருந்ததில்லை என்பதே கடந்த கால வரலாறு” என்கிறார், காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளர்களில் ஒருவரான கிறிஸ்டோபர் திலக்.

மேலும், “ மோடி பிரதமராக உள்ள இந்தக் காலகட்டத்தில் நடந்த 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 4 தொகுதிகளில் வெற்றிபெற்ற பாஜக, ஏற்கெனவே வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் நடந்த 2001 சட்டமன்றத் தேர்தலிலும் இதேபோல 4 இடங்களில் வெற்றிபெற்றது. ஆனாலும், ஒரு வித்தியாசத்தை உணர முடிகிறது. 2001-ல் முழுக்க முழுக்க திமுக ஓட்டுக்களை வைத்தே அந்த வெற்றியைப் பெற்றது பாஜக. இம்முறையும் அதிமுக வாக்குகளே இவர்களைக் கரை சேர்த்திருக்கிறது என்றாலும், பாஜகவுக்கென கொஞ்சம் வாக்குவங்கி உருவாகியிருப்பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது” என்றும் கிறிஸ்டோபர் திலக் ஒப்புக்கொள்கிறார்.

குமரகுரு
குமரகுரு

திராவிடக் கட்சியிலிருந்து பாஜகவுக்குச் சென்றவரும், அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் ஏ.குமரகுருவோ, "தமிழகத்தில் 50, 60 ஆண்டுகளாக தேசியக் கட்சிகளுக்கு எதிராகப் பேசிப் பேசி, தேசிய உணர்ச்சியே இல்லாமல் ஆக்கிவிட்டார்கள். அதனால்தான் காங்கிரஸ் கட்சி 50 ஆண்டுகளாக தேய்ந்துகொண்டே வருகிறது. மக்களும் அக்கட்சியை முற்றாக நிராகரித்துவிட்டார்கள். ஆனால், பாஜக மக்களுக்கு உண்மையான தேசிய உணர்ச்சியை ஊட்டித்தான் இங்கே வளர்ச்சியடைந்திருக்கிறது. 2014-க்கும் 2021-க்கும் இடையே ஒப்பிட்டுப் பார்த்தால், கட்சியின் அசுர வளர்ச்சி புரியும். தமிழகத்தில் ஒரு எம்பி கூட இல்லையென்றாலும், எல்.முருகனை மாநிலங்களவை எம்பி-யாக்கி, தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மத்திய அமைச்சர் பதவியைத் தந்திருக்கிறது பாஜக. மத்திய அரசுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான பாலமாக அவர் செயல்படுகிறார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பேசிப் பேசித்தான் அரசியல் செய்ய முடியும். மத்திய பாஜக என்ன செய்திருக்கிறது, என்னென்ன செய்யப்போகிறது; திராவிடக் கட்சிகள் என்னென்ன தவறுகள் செய்கின்றன என்பதை எல்லாம் புதிய தலைவர் அண்ணாமலை போட்டு உடைக்கிறார். அவரது வித்தியாசமான அணுகுமுறை கட்சியின்பால் இளைஞர்களை அதிகமாக ஈர்க்கிறது. அண்ணாமலையைப் போன்ற ஒரு செயல்திறன் மிக்கவரை, படித்தவரை இவ்வளவு இளம் வயதிலேயே மாநிலத் தலைவராக இந்தியாவிலேயே எந்தக் கட்சியும் நியமித்தது இல்லை. இது இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தைத் தந்திருக்கிறது.

அண்ணாமலை, ‘திறமை இருந்தால் இங்கே யார் வேண்டுமானனலும் தலைவராகலாம். காங்கிரஸில் 6 பேர்தான் மாறி மாறி பதவிக்கு வருவார்கள். திமுகவில் கருணாநிதி குடும்பத்தினரைத் தவிர யாரும் பொறுப்புக்கே வர முடியாது. பாஜகவில் இன்று நான், நாளை நீங்கள் கூட தலைமைப் பதவிக்கு வரலாம்’ என்று பேசுகிறார். ரொம்பவே எளிமையாக இருக்கிறார். நான் தலைவன் என்கிற ஈகோ அவரிடம் இல்லை. இதன் தாக்கத்தை அடுத்த தேர்தலில் நீங்களே கண்கூடாகப் பார்ப்பீர்கள்" என்றார்.

பார்க்கத் தானே போகிறோம்?

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in