'அண்ணாமலை வருவார் அவரிடம் கேளுங்கள்': நழுவிய தமிழிசை!

ஆளுநர் தமிழிசை
ஆளுநர் தமிழிசை'அண்ணாமலை வருவார் அவரிடம் கேளுங்கள்': நழுவிய தமிழிசை!

கர்நாடகா மாநிலத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாதியில் நிறுத்தப்பட்ட விவகாரம் குறித்துக் கேள்விக்கு, ‘அண்ணாமலை வருவார் அவரிடம் கேளுங்கள்’ என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நழுவினார்.

பாவேந்தர் பாரதிதாசனின் 133-வது பிறந்த நாளை முன்னிட்டுச் சென்னை மெரினாவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்குத் தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் மலர்தூவி மரியாதைச் செய்தார்.

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘’ பாரதிதாசனின் 133-வது பிறந்த நாளில் அவருக்கு மரியாதைச் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. பாரதிதாசனின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை புதுச்சேரியில் நடைபெறும் விழாவில் தமிழ் அறிஞர்கள் கௌரவிக்கப்பட உள்ளனர்.

புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் அவர் எழுதியது தான் என்பது எங்களுக்குக் கூடுதல் பெருமை. புதுவையோடு ஒன்றியவர்கள் பாரதியாரும், பாரதிதாசனும். அதனால் அவர்களுக்கு மரியாதைச் செய்வதை நான் பெருமைக் கொள்கிறேன். பிரதமர் மோடியின் மனதின் குரல் 100-வது நிகழ்ச்சியைச் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளோம். இளைஞர்கள் மனதின் குரல் நிகழ்ச்சியைக் கேட்க வேண்டும். ஏனெனில் இது அரசியல் கலவாத சமுதாய நிகழ்ச்சி.

புதுச்சேரியில் பெண்களுக்குப் பணியில் 2 மணி நேரம் குறைக்கப்பட்டதற்கு எதிர்கட்சிகளிடம் இருந்து வரவேற்பு இருக்காது என்பது தெரியும். ஆனால், அதனைப் பெண் அடிமை என்கிறார்கள், நிச்சயம் கிடையாது. பெண்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் எந்த விதத்திலும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் கட்டமைக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கருணாநிதி தற்போது உயிரோடு இருந்திருந்தால், இதையே தான் நினைத்து இருப்பார்.

கர்நாடகா மாநிலத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்ட விவகாரம் குறித்து அண்ணாமலை வருவார் அவரிடம் கேளுங்கள். டெல்லியில் விளையாட்டு வீரர்கள் நடத்தும் போராட்டம் குறித்த தகவல் இல்லை. ஒன்று மட்டும் உறுதியாகக் கூற முடியும், பிரதமர் மோடி ஆட்சியில் பெண்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளனர்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in