காட்டம் காட்டிய ஆற்காட்டார் மகன்: தவறுதலாக பேசி விட்டேன் என்று மன்னிப்பு கேட்ட அண்ணாமலை!

காட்டம் காட்டிய ஆற்காட்டார் மகன்: தவறுதலாக பேசி விட்டேன் என்று மன்னிப்பு கேட்ட அண்ணாமலை!

நாமக்கல் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி இறைவனடி சேர்ந்து விட்டார் என்று பேசிய பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் கடந்த புதன்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். அப்போது, “ஆற்காடு வீராசாமி அண்ணன் இப்போது இல்லை, இறைவனடி சேர்ந்து விட்டார்” என பேசினார்.

திமுக முன்னாள் அமைச்சரான ஆற்காடு வீராசாமி உயிருடன் நல்ல நிலையில் உள்ளார். ஆனால், அண்ணாமலை பேசிய இந்த பேச்சு திமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆற்காட்டார் உயிருடன் இருப்பது தெரியாமல், அண்ணாமலை பேசிய வீடியோவை பாஜகவினர் பரப்பினர்.
அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி உடனடியாக பதிலடி தந்தார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தனது கொள்ளுப் பேரனின் பிறந்த நாள் விழாவில் நேற்று குடும்பத்துடன் கலந்து கொண்டு மகிழ்ந்த ஆற்காட்டார் குறித்து, எப்போதும் எங்கள் தலைவர்களைப் பற்றி உளறும் பாஜக தலைவர் அண்ணாமலை தவறான கருத்தைக் கூறியதற்கு வன்மையுடன் கண்டிக்கிறேன். அவர் நலமாக உள்ளார்" என்று பதிவிட்டார்.

அந்த பதிவை ரீ ட்விட் செய்த பாஜக தலைவர் அண்ணாமலை, "தங்களுடைய தந்தை அண்ணன் ஆற்காட்டார் நீண்ட ஆயுளோடு உங்கள் அனைவருடைய அரவணைப்போடு நன்றாக வாழ்வதற்கு இறைவனை வேண்டுகிறேன். நாமக்கல் பொதுக்கூட்டத்தில் தவறுதலாக உங்கள் தந்தை இறைவனடி சேர்ந்து இருக்கின்றனார் என்று சொன்ன கருத்துக்காக வருந்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in