அண்ணாமலைக்கு ‘நேரம்’ நல்லாருக்கா?

தமிழக அரசியல் களத்தைச் சதாய்க்கும் ‘வாட்ச்’ மோதல்!
அண்ணாமலைக்கு ‘நேரம்’ நல்லாருக்கா?

கோலிவுட் இயக்குநரான பேரரசுவிடம், பத்திரிக்கையாளர் சந்திப்பொன்றில் தமிழக அரசியலில் ட்ரெண்டாகி வரும் வாட்ச் விவகாரம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு, பாஜகவில் அங்கம் வகிக்கும் அவர் தனக்கே உரிய ’பன்ச்’ பாணியில், "வாட்ச் கட்டியிருப்பவரிடம் மணி என்ன என்றுதான் கேட்பார்கள். மாறாக வாட்ச் விலையை கேட்டால் அவர்களுக்கு நேரம் சரியில்லை என்றுதான் அர்த்தம்" என்றார்.

இதில் ’அவர்கள்’ என்பது, கேள்வி எழுப்பியவரா? கேள்விக்கு ஆளானவரா? என்பதுதான் தமிழக அரசியல் சூழலில் தற்போதைக்கு கேள்வியாக நீடிக்கிறது.

வாய்பிளக்க வைத்த வாட்ச்சுகள்

செல்போன் யுகத்தில் வாட்ச் கட்டுவோர் அருகி வருகின்றனர். வாட்ச் மட்டுமல்ல, பேனா, பர்ஸ், குறிப்பு நோட்டு, ரொக்கம் என முந்தைய தலைமுறையினர் பாக்கெட்டில் திணித்துச் சென்ற பலவற்றையும் ஸ்மார்ட் போன் ஒன்றே விழுங்கிவிட்டது. மணிக்கட்டில் வாட்ச் கட்டியே பழகிய ஒரு சிலர் மட்டுமே அவற்றை விடாது தரித்திருக்கின்றனர். செல்போன் போலவே வாட்ச்சிலும் ’ஸ்மார்ட்’ முன்னொட்டு சேர்ந்ததில், ஆயிரங்களில் தொடங்கி லட்சங்கள் வரை வாட்சுகள் சந்தையில் கிடைக்கின்றன.

பாஜக தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருந்தது அப்படியான ஒரு வாட்ச். அதன் விலை சுமார் ரூ.5 லட்சம் என்கின்றனர் அண்ணாமலைக்கு எதிரானோர். 'திமுக குடும்பத்தில், தம்பி உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாப்பிள்ளை சபரீசன் ஆகியோர் கட்டியிருக்கும் வாட்ச் விலை கோடிகளில்' என்று அண்ணாமலை ஆதரவாளர்கள் தங்கள் பாணியிலான ஆதாரத்துடன் பட்டியலிடுகின்றனர். ’ஒற்றை வாட்ச் விலை ரூவா கோடிகளிலா..?’ என்று வாட்ச் கட்டுவதை மறந்துபோன சாமானியர்கள் வாய் பிளந்திருக்கிறார்கள். மக்களின் திறந்த வாய் மூடவிடாத இந்த வாட்ச் விவகாரத்தை ஒட்டி ஏராளமான விவகாரங்கள் வெளியாகி வருகின்றன.

எகிறியடிக்கும் செந்தில் பாலாஜி - அடக்கி வாசிக்கும் அண்ணாமலை

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியின் எதிரெதிர் வேட்பாளர்களாக மூண்ட செந்தில் பாலாஜி - அண்ணாமலை இடையிலான போட்டி, மின்துறை அமைச்சர் - பாஜக தலைவர் இடையிலான மோதலாக இப்போது வளர்ந்து நிற்கிறது. தனிப்பட்ட தாக்குதல்கள், குற்றச்சாட்டுகள், வரம்பு மீறிய வசவுகள் என அனல் பரத்திய இந்த தாக்குதல் அண்மையில் ஸ்மார்ட் வாட்ச் ஒன்றில் நிலைகொண்டது. அண்ணாமலை கையில் அலங்கரிக்கும் வாட்ச் குறித்து கேள்வியெழுப்பிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “அதற்கான ரசீதினை உடனடியாக பொதுவெளியில் பகிர முடியுமா?” என அவருக்குச் சவால் விடுத்தார்.

அண்ணாமலை அந்தக் கேள்வியை புறந்தள்ளாது, ஆறஅமர விளக்கமளித்தது சர்ச்சைக்கு தூபமிட்டது. “இந்தியாவுக்காக பிரான்ஸில் தயாரிக்கப்பட்ட போர் விமானமான ரஃபேலின் உதிரி பாகங்களில் இருந்து தயாரித்த வாட்ச் இது. ரஃபேல் விமானத்தை ஓட்டும் பாக்கியம் கிட்டாத தேசியவாதிக்கு ரஃபேல் வாட்ச் கட்டும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது” என்று நீட்டி முழக்கினார். செந்தில் பாலாஜி விடவில்லை. ரசீது விடயத்தையே கெட்டியாக பிடித்துக்கொண்டு, மீண்டும் அதையே எழுப்பினார். பதிலாக, “என்னைவிட என் மனைவி 7 மடங்கு சம்பாதிக்கிறார்... திமுகவின் 2 லட்சம் கோடி ஊழலை பாரீர்...” என்றெல்லாம் அண்ணாமலையிடம் இருந்த உளறலே வந்தது. அந்த இடத்தில் செந்தில் பாலாஜியின் நோக்கம் நிறைவேறியது. தன்னைப் பற்றி அண்ணாமலை கட்டியயெழுப்ப முயன்ற அப்பழுக்கற்ற பிம்பத்தில் விரிசல் விழுந்தது.

அண்ணாமலை எனும் நுணல்?

வாய் விட்டு மாட்டிக்கொள்வதில் அண்ணாமலைக்கு இது ஒன்றும் புதிதல்ல. அதேபோன்று அவர் எழுப்பும் கேள்விகள் அப்போதைய பரபரப்புக்கு அப்பால், அவரே மறந்து விடுவதும் நடக்கிறது. இவை வழக்கமான பாஜக தலைவர்களின் நாடு தழுவிய உத்தி. ஆனால், தமிழகத்தில் அது ஏனோ எடுபடவில்லை. “ஏப்ரல் மாதம் தொடங்கவிருக்கும் என்னுடைய பாத யாத்திரையின் தொடக்க நாளன்று வாட்ச் ரசீதினை வெளியிடுவேன்” என்ற அண்ணாமலை பிற்பாடு, “இந்த வாட்ச் விவகாரம் பெரிதாய் கிளம்பட்டும். திமுக பிரபலங்களின் சொத்து விவகாரங்கள் குறித்து அப்போதுதான் மக்கள் கேள்வி எழுப்புவார்கள். அப்படி டீக்கடை வரை மக்கள் பேசத் தொடங்கும்போது, வாட்ச் ரசீதினை வெளியிடுவேன்” என்று அந்தர்பல்டி அடித்தார்.

திமுக, அதிமுக பிரபலங்களின் சொத்துப் பட்டியல் இந்த விநாடி வெளியானாலும், தமிழக மக்கள் மத்தியில் பெரிதாய் ஆச்சரியம் எழப்போவதில்லை. ஆனால், மேற்படி அரசியல் மற்றும் அரசியல்வாதிகளுக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்திய அண்ணாமலை, அதே வழியில் வழுக்கி இருப்பதைத்தான் மக்கள் அடையாளம் கண்டிருக்கிறார்கள். மேலும், முன்பின் முரணாக பேசுவதில் திராவிட கட்சி தலைகளுக்குப் போட்டியாக மாறி வருகிறார் அண்ணாமலை. தான் மாற்று முகம் அல்ல என்பதில் அவரது முகமூடி கிழிந்திருக்கிறது.

தன் வாயால் கெடும் அண்ணாமலை ஊர் வாயிலும் விழுந்திருக்கிறார். “வார் ரூம் என்ற பெயரில் முக்கிய புள்ளிகளை மிரட்டி சம்பாதிக்கிறார்” என்ற செந்தில் பாலாஜியின் புகார் முதல், “ரஃபேல் ஊழலின் அன்பளிப்பாக கிடைத்த வாட்ச்” என்ற பொதுஜனம் மத்தியிலான புரளி வரை அல்லோலகல்லோலப்பட்டிருக்கிறார் அண்ணாமலை. அண்ணாமலைக்கு எதிரானவர்கள் மட்டுமல்ல அவர் உடனிருப்பவர்களும் இதில் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

பாஜகவினரின் உள்ளடிகள்

பொதுவெளியில் அதிகம் அறியப்படாத, பாஜகவுக்கே உரிய இரட்டை அதிகார மோதலுக்கு தமிழக பாஜகவும் விலக்கல்ல. ’பின்னிருந்து இயக்கும் சித்தாந்த ஆர்எஸ்எஸ் அபிமானிகள் மற்றும் வாக்கரசியலுக்காக முன்னிறுத்தப்படும் வெகுஜனதலைவர்கள்’ என இரு அதிகார மையங்கள் இடையே அவ்வப்போது எழும் மோதல்கள், டெல்லி முதல் சென்னை வரை தொடர்கின்றன. கட்சியை கையில் வைத்திருக்கும் மோடி - அமித் ஷா ஆகியோருக்கும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கும் இடையே உரசல்கள் எழுந்து அடங்குவது வழக்கம்.

தமிழகத்திலும் பாஜகவின் மாநில அமைப்புப் பொதுச்செயலர் கேசவ விநாயகன் மற்றும் தலைவர் அண்ணாமலை இடையிலான நிழல் யுத்தம் தொடர்ந்து வருகிறது. ஒற்றைத் தலைமையாக தன்னை நிலைநிறுத்தும் முயற்சியில் அண்ணாமலை தெளிவாக முன்னேறி வருகிறார். கே.டி.ராகவன் முதல் மதன் ரவிச்சந்திரன் வரை கட்சியில் தனக்கு எதிரானவர்கள் என சந்தேகத்துக்கு ஆளாவோரை நேக்காக கட்டம் கட்டி விடுகிறார். ’ஹனி டிராப் முதல் கட்டப்பஞ்சாயத்து’ வரையிலான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டாலும், அவற்றை அலட்சியப்படுத்தி கடக்கிறார். இந்த மோதலில் திருச்சி சூர்யா போன்ற அண்ணாமலையின் அன்புக்குரியவர்களும் சில தருணங்களில் களப்பலி ஆகிறார்கள்.

வாட்ச் விவகாரத்திலும் பாஜகவினர் சேம் சைட் கோல் அடித்தனர். அண்ணாமலையையும் அப்படி குற்றம் சாட்டினர். ’ரஃபேல் வாட்ச்’ என்ற பெயரில் மக்கள் மத்தியில் மறக்கடிக்கப்பட்ட பாஜகவின் ’ரஃபேல் பேர’ ஊழல் புகார் விவகாரங்களை அண்ணாமலை வம்படியாக கிண்டிவிட்டதாக அவர்கள் வருந்துகின்றனர். இந்தியாவில் நீதிமன்ற வகையிலும் முடித்துவைக்கப்பட்ட இந்த ரஃபேல் விவகாரம், அந்த போர் விமானங்களை தயாரித்த பிரான்சில் இன்னமும் கனன்று கொண்டிருக்கிறது. மேலும், ரஃபேல் விமானங்களை தயாரித்த தஸால்ட் ஏவியேசன் தயாரிப்பிலான பிரான்ஸ் வாட்ச், எப்படி ’மேக் இன் இந்தியா’வை வலியுறுத்தும் தேசியவாதி அண்ணாமலைக்கு பெருமை சேர்க்கும் என்றும் லாஜிக் உடைக்கிறார்கள்.

ஆளரவமின்றி இருந்த எஸ்.வி.சேகர் போன்றோர் மணிக்கட்டு வாட்ச் உடன் புகைப்படங்களை பகிர்ந்து ‘சும்மா.. தோணுச்சு..’ என்று வெறுப்பேற்றி வருகிறார்கள். செந்தில் பாலாஜி போன்றோர்களைவிட இந்த உள்ளடிகளைச் சமாளிப்பதே அண்ணாமலைக்கு பெரும்பாடாக இருக்கிறது.

அண்ணாமலையின் ஆசைகள்

இவற்றுக்கு மத்தியில் வாட்ச் என்பதை வைத்து தன்னை எம்ஜியாருக்கு நிகராக முன்னிறுத்தும் அண்ணாமலை, அரசியல் வியூகங்களில் அநியாயத்துக்குச் சொதப்புகிறார். எப்படியாவது, 2024 மக்களவை தேர்தலில் கணிசமான எம்பி-க்களை டெல்லிக்கு அனுப்பி வைத்து, கட்சிப் பதவியை தக்கவைப்பது அண்ணாமலையில் முதற்கட்ட திட்டமாக இருக்கிறது. அதன் பின்னர் மாற்று அணியை உருவாக்குவதுடன், பாஜகவுக்கு பழகிய பாணியில் அதிமுகவை உடைத்து அல்லது செரித்து, 2026-ல் முதல்வர் நாற்காலியை நோக்கி நகர வேண்டுமென்பது அடுத்தக்கட்ட அதீத ஆசையாக இருக்கிறது.

திமுக அவசரமாய் உதயநிதியை முன்னிறுத்தியதே அண்ணாமலையை எதிர்கொள்ளத்தான் என்று அண்ணாமலை தரப்பினர் நம்புகின்றனர். ஆரம்பச் சுற்றுக்கு வம்படியாய் செந்தில் பாலாஜியை களமிறக்கி இருப்பதையும், அண்ணாமலையின் ஆதி ரகசியங்கள் அறிந்த; அவரால் பாஜகவிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட மதன் ரவிச்சந்திரனுக்கு ’திமுக ஐடி விங்’ முக்கிய பொறுப்பு வழங்கியிருப்பதையும் இந்த கோணத்திலே பார்க்கிறார்கள். அண்ணாமலைக்கு எதிரான இந்த அரசியல் நகர்வுகள் நடைமுறையில் அண்ணாமலையை மேலும் கூர்மையாக்கும், அரசியல் ரீதியாக பலப்படுத்தும் என்று அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.

‘நேரம்’ நல்லாருக்கா?

ஒரு வகையில் தமிழகத்தின் பேசு பொருளாக தான் இருப்பதையும், தன்னைச் சுற்றி அரசியல் சர்ச்சைகள் உருள்வதையும் அண்ணாமலையும் ரசிக்கவே செய்கிறார். முதல்வர் குடும்பம் முதல் அமைச்சர்கள் வரை சொத்துப்பட்டியலை விரைவில் வெளியிடுவேன் என்ற அண்ணாமலையின் அறிவிப்புக்கு, திமுக தலைகள் வெளியே அலட்சியம் காட்டினாலும் உள்ளே உதறத்தான் செய்வார்கள். ஏற்கெனவே இதுபோன்ற பட்டியல் அறிவிப்புக்கு அண்ணாமலை ஆயத்தமானதும், திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் நடந்ததாக தகவல்கள் கசிந்தது குறிப்பிடத்தக்கது.

இம்மாதிரி ஊழல் குற்றச்சாட்டுகளின்போது திமுக - அதிமுக இடையே பேசிவைத்தார் போன்று கணக்காகவே அடித்துக்கொள்வார்கள். ஆனால், அண்ணாமலை இறங்கி அடிக்கிறார். காவல்துறை முதல் அரசின் அனைத்து நிர்வாக பீடங்கள் வரை அண்ணாமலைக்கு ஆட்கள் இருப்பதும் திமுகவுக்கு குடைச்சல் தருகிறது. சொத்துப்பட்டியல் வெளியாவதற்கும், அமலாக்கத்துறையினர் கதவைத் தட்டுவதற்கும் இடையிலான சொற்பங்கள், திமுக இரண்டாம் கட்டத் தலைகளுக்கு இப்போதே கண்ணைக்கட்டும்.

மக்களவை தேர்தலுக்கான கூட்டணி என்ற பெயரில் அரசியல் சமன்பாடுகள் மாறுவதற்கும் இந்த பரஸ்பர நெருக்கடிகள் வாய்ப்பாகலாம். மற்றபடி முதல் சுற்றில் அண்ணாமலை சறுக்கினாலும், சுதாரித்து அடுத்தடுத்த சுற்றுகளுக்கு தயாராகி வருகிறார். மத்தியில் இருப்பவர்களின் ஆசியும், எதிர் வரும் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தும் அண்ணாமலையின் ’நேரம்’ ரஃபேல் வாட்ச்சில் நல்லபடியாகவே காட்டும்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in