`கையில் காகிதமும் இல்லை; மண்டையில் மூளையும் இல்லை'- அண்ணாமலையைச் சாடும் செந்தில் பாலாஜி!

`கையில் காகிதமும் இல்லை; மண்டையில் மூளையும் இல்லை'- அண்ணாமலையைச் சாடும் செந்தில் பாலாஜி!

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது.

மின்சாரக் கட்டணத்தை உயர்த்திய போது, ‘மத்திய அரசின் அழுத்தத்தின் காரணமாகவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது’ என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்த அண்ணாமலை, ”மத்திய அரசு எந்த கடிதத்தில் ஏற்றச் சொல்லி இருக்கிறது எனக் காட்டுங்கள். அரசு காற்றாலையில் மின் உற்பத்தியை நிறுத்திவிட்டு தனியாரிடமிருந்து 4,600 கோடி ரூபாய் அளவில் மாநில அரசு மின்சாரத்தை வாங்குகிறது. அதில் 4 சதவீதம் கமிஷனாக கணக்கிட்டால் 220 கோடி ரூபாய் செந்தில் பாலாஜிக்கு கமிஷனாக கிடைக்கிறது” என தெரிவித்திருந்தார். ”தைரியமான ஆண்மகனாக இருந்தால் மின்சாரத்துறை செய்யும் தவறுகளை ஆதாரங்களோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். பத்திரிகைகளில் செய்தி வரவேண்டும் எனப் பேசிவரும் அரைவேக்காடுகளுக்குப் பதில் சொல்லி என்னுடைய நேரத்தை வீணடிக்கவில்லை” என்றார் செந்தில் பாலாஜி.

இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, “மின்துறையில் ஊழல் நடைபெறுவதாக நாங்கள் சொன்ன புகாருக்கு, நீதிமன்றம் செல்லுமாறு செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். எங்களுடைய ஆட்சியில் நீதி கிடைக்காது எனத் தவறு செய்துள்ளதை ஒப்புக் கொண்டதற்கு நன்றி. திமுக அமைச்சர்கள் மீது கவர்நர் அலுவலகத்தில் கொடுத்த புகார் விசாரணையில் இருக்கிறது. அமலாக்கத்துறை பிசியா இருக்கிறார்கள். அவங்க கொஞ்சம் ஃபிரியாகிவிட்டு இந்தப்பக்கம் வருவார்கள்” என்றார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “அண்ணாமலை எப்போது அமலாக்கத்துறை இயக்குநரானார்? உத்தரவு போடும் அளவிற்கு மத்திய நிதி அமைச்சராக இருக்கிறாரா? 24 ஆயிரம் வாக்குகளில் அவரை தேர்தலில் தோற்கடித்து வெளியூருக்குத் துரத்தி விட்டுவிட்டார்கள். ஊர் பக்கமே அவரைப் பார்க்க முடியவில்லை. ஒன்றிய அரசின் அரசியல் கட்சியில் இருக்கும் ஒருவர், அமலாக்கத்துறையில் எதையெல்லாம் செய்யப்போகிறார்கள் எனப் பொதுவெளியில் சொல்கிறார்.

அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு எந்த அளவிற்குப் பயன்படுத்துகிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. அமலாக்கத்துறை என்பது தன்னிச்சையாகச் செயல்படக் கூடிய ஒரு அமைப்பு. அதில் நாங்கள் தலையிடுவதில்லை என நாடாளுமன்றத்திலும் பொது வெளியிலும் பாஜகவினர் சொல்லி வருகிறார்கள். எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்லி வரும் அண்ணாமலையின் கையில் காகிதமும் இல்லை. மண்டையில் மூளையும் இல்லை. வேலை வெட்டி இல்லாமல் பேசி வருபவர்களுக்கு என்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை” என்று சாடினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in