`திமுக சர்வாதிகாரத்திற்கு மக்கள் விரைவில் முடிவுகட்டுவார்கள்': அண்ணாமலை காட்டம்!

`திமுக சர்வாதிகாரத்திற்கு மக்கள் விரைவில் முடிவுகட்டுவார்கள்':  அண்ணாமலை காட்டம்!

ஆ.ராசாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய கோவை மாவட்ட பாஜக தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து தமிழக அரசிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் கடந்த 5-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா, இந்து மதத்தை அவதூறாகப் பேசியதாகச் சர்ச்சை வெடித்தது. இது குறித்து பாஜக தரப்பில் கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் நிர்வாகிகள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பீளமேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆ. ராசாவை மிரட்டும் வகையில் கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி பேசியிருந்தார். அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசியதாக உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “தொடர்ச்சியாக இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வரும் திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா அவர்களை இந்த திறனற்ற திமுக அரசு கண்டிக்கவும் இல்லை, கைது செய்யவும் இல்லை. வெறுப்பை உமிழும் ஆ.ராசாவை கண்டித்ததற்காகக் கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி  அவர்களை காவல்துறை இன்று காலை கைது செய்துள்ளதைத்  தமிழக பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி வரும் ஆ.ராசாவைக் கைது செய்யாமல், திமுகவின் இரண்டாம் கட்ட பேச்சாளர்களை மிஞ்சிய அவரது இழிவான பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த தமிழக பாஜக மாவட்ட தலைவரைக் கைது செய்தது ஏன்? திமுக அரசே, உங்கள் அடக்குமுறைகளுக்கு நாங்கள் என்றும் அஞ்சமாட்டோம், உங்களது சர்வாதிகாரத்தனத்திற்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்” எனக் காட்டமாகப் பதிவு செய்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in