`திமுக கொடுக்கும் ஆக்ஸிஜனில் உயிர் வாழ்கிறவர்கள் ரஜினியை விமர்சிக்கிறார்கள்’- அண்ணாமலை காட்டம்

`திமுக கொடுக்கும் ஆக்ஸிஜனில் உயிர் வாழ்கிறவர்கள் ரஜினியை விமர்சிக்கிறார்கள்’- அண்ணாமலை காட்டம்

”கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு வேறு வேலையே இல்லை. திமுக கொடுக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை கையில் சுமந்து கொண்டு, அதை மூக்கில் வைத்துக் கொண்டு உயிரோடு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

தமிழக ஆளுநரைச் சந்தித்த நடிகர் ரஜினி, ஆளுநருடன் அரசியல் பேசியதாகவும், அது குறித்து ஊடகங்களிடம் தெரிவிக்க முடியாது எனவும் தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரித்திருந்தனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். ‘ஆளுநருடன் பேசிய அரசியல் குறித்து ஊடகங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது என ரஜினிகாந்த் குறிப்பிட்டிருந்தது வித்தியாசமாக இருந்தது. அரசியல் பேசுவதற்கு ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல’ என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “ஜம்மு-காஷ்மீரில் நெய்யப்பட்ட தேசியக் கொடி அங்கிருந்து வரவழைக்கப்பட்டு பாஜக அலுவலகத்தில் ஏற்றி வைக்கப்படும். அங்கிருக்கும் சுய உதவிக் குழுவில் உள்ள ஒருவர் ஏற்றி வைக்கிறார். அதுபோல் ஒவ்வொரு விஷயத்தையும் இந்தியர்கள் பார்த்துப் பார்த்துச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அரசியல் பேசுவதற்காக வீட்டிலே தேசியக் கொடியை ஏற்றுவதைக்கூட அரசியலாக்குகிறார்கள். எந்த அளவிற்கு அவர்களுக்குப் பிற்போக்குத்தனம் உள்ளது என்பதைத் தமிழக மக்கள் உணர வேண்டும்.

ஆளுநர் பல இடங்களில் பல மனிதர்களை சந்திக்கின்றார். ஆளுநர் பதவி வகிக்கக் கூடிய மாநிலத்தில் வித்தியாசமான மனிதர்கள், சாதனை மனிதர்கள் என அனைத்து மனிதர்களையும் சந்தித்துப் பேசுவது ஒரு மரபாக இருக்கிறது. அதுபோல பலபேர் அவரைச் சந்தித்து வருகிறார்கள். அந்த வகையில்தான் ரஜினியும் சந்தித்திருக்கிறார். பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரஜினியும் அரசியல் பேசியதாகத்தான் சொன்னார். இதில் என்ன தவறு இருக்கிறது. திமுகவின் ‘பி’ டீமாக இருக்கும் கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் திமுக கொடுக்க கூடிய ஆக்ஸிஜனில் உயிர்வாழும் சில கட்சித் தலைவர்கள் தன்னுடைய இருப்பிடத்தைக் காட்டுவதற்காக ரஜினியை விமர்சித்திருக்கிறார்கள்.

ரஜினி சொன்னதிலே என்ன தவறு இருக்கிறது? அவர்களுக்குள் இந்திய அரசியல், உலக அரசியலைப் பற்றி விவாதித்திருப்பார்கள். அரசியல் இல்லாத வாழ்க்கையை காட்ட முடியுமா? கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு வேறு வேலையே இல்லை. திமுக கொடுக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை கையில் சுமந்து கொண்டு அதை மூக்கில் வைத்துக் கொண்டு அவர்கள் உயிரோடு சுற்றி கொண்டிருக்கிறார்கள். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது போலத் தவறு செய்தவர்கள் பயந்து கொண்டே இருக்கிறார்கள்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in