`குடும்பத்தை மறந்து உழைத்தால் குட்டி மோடியாக உருவாகலாம்’ ஸ்டாலினை விளாசும் அண்ணாமலை!

`குடும்பத்தை மறந்து உழைத்தால் குட்டி மோடியாக உருவாகலாம்’ ஸ்டாலினை விளாசும் அண்ணாமலை!

‘ஒரு குட்டி மோடியாக மாற மு.க. ஸ்டாலின் ஆசைப்படுகிறார். அப்படி அவர் உருவாக வேண்டுமென்றால் குடும்பத்தை மறந்து அடித்தட்டு மக்களுக்காக உழைக்க வேண்டும்’ எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார்ப் பள்ளி வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் எட்டு ஆண்டுக்கால ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் சிறுபான்மை மக்களை வெறும் ஓட்டு வங்கியாக மட்டுமே திமுக பயன்படுத்தி வருகிறது. அவர்களுக்காக வேறு எதையும் அக்கட்சி செய்யவில்லை. இரண்டாவது முறையாக அப்துல் கலாமைக் குடியரசுத் தலைவராக ஆக்க வேண்டும் என பாஜக தெரிவித்தது. அப்போது, 'கலாம் என்றால் கலகம்' எனச் சொன்னவர்தான் கருணாநிதி. தற்போது பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்முவின் பெயர் அறிவிக்கப்பட்டதுமே முதல்வர் மு.க. ஸ்டாலினுக்குக் காய்ச்சல் தொடங்கிவிட்டது. உண்மையான சமூகநீதிக்கான கட்சியாக திமுக இருந்தால், திரௌபதி முர்முவை ஆதரிக்க வேண்டும். இப்போதும் அரசியலுக்காக திமுகவினர் ஏதாவது காரணத்தைத் தேடிக் கொண்டிருப்பார்கள்.

புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல, பிரதமர் நரேந்திர மோடியைப் பார்த்து, தானும் 'குட்டி மோடி' ஆக வேண்டும் என ஆசைப்படுகிறார் மு.க.ஸ்டாலின். அப்படிக் குட்டி மோடியாக அவர் உருவாக வேண்டுமானால் குடும்பத்தை மறந்து அடித்தட்டு மக்களுக்காக உழைக்க வேண்டும்.

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சமீபத்தில் 1000 கிலோ கஞ்சாவைத் தீயில் வீசி அழித்துள்ளார். இதன் மூலம், தமிழகத்தில் சென்னை தான் கஞ்சாவின் தலைநகரமாக இருக்கிறது என அரசே பகிரங்கமாக ஒத்துக் கொள்கிறது. மு.க. ஸ்டாலின் துணிச்சல் இல்லாத முதல்வராக இருப்பதால்தான் அவரால் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in