
மத்திய அரசின் எச்சரிக்கை கடிதத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் தொடர்புடைய கண்காணிக்க வேண்டியவர்களின் பெயர்கள் பட்டியலில் 89-வது நபராக முபின் அவர்களின் பெயர் உள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் கார் சிலிண்டர் விபத்து ஏற்பட்ட இடத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று பார்வையிட்டு, அப்பகுதி மக்களைச் சந்தித்து சம்பவம் குறித்து விசாரித்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “கோவை சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் குற்றவாளிகள்தான் எனக் கூறுகிறோம். அவர்களுக்கு எவ்வித மத சாயங்களையும் நாங்கள் பூசவில்லை. எல்லா மதங்களும் ஆன்மிகம், பொறுமை நன்மை, அமைதி என்ற கோட்பாடுகளைப் பெற்றுள்ளன. கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட சில பொருட்களை அப்பகுதி மக்கள் என்னிடம் கொடுத்திருக்கிறார்கள். வெடிவிபத்து சம்பவம் தொடர்பாக காவல்துறையில் சில தவறுகள் நடந்திருக்கிறது. அதைத் திருத்த வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது. ‘தேவையில்லாமல் அண்ணாமலை இந்த சம்பவத்தைத் திசை மாற்ற விரும்புகிறார். காவல் துறைக்கு நெருக்கடி கொடுக்கிறார்’ என டிஜிபி சைலேந்திரபாபு அறிக்கை விடுத்திருக்கிறார்.
வழக்கில் இருப்பவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், விசாரணையில் இருப்பவர்கள், ஜாமீனில் வந்தவர்கள் என ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 96 பேரைக் கண்காணிக்கத் தமிழகக் காவல்துறைக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. அதில் 89 -வது நபராக முபின் அவர்களின் பெயர் உள்ளது. முபின் அவர்களின் கடையும் இங்கேதான் இருக்கிறது. இதையெல்லாம் சரிவரக் கண்காணிக்கப்படாமல் போனதால் இந்த விபத்து நடந்திருக்கிறது. எல்லா மதத்திலும் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொள்கைகள் தவறானது என சில இஸ்லாம் மத குருமார்களே சொல்கிறார்கள்.” என்றார்.