`ரஜினி மட்டும்தான் கருத்து சொன்னாரா... திருமாவளவன், சீமான் சொல்லவில்லையா?- அண்ணாமலை காட்டம்

`ரஜினி மட்டும்தான் கருத்து சொன்னாரா... திருமாவளவன், சீமான் சொல்லவில்லையா?- அண்ணாமலை காட்டம்

அருணா ஜெகதீசன் ஆணையத்தில் உள்ள பல்வேறு கருத்துகள் திரித்து கூறப்பட்டவை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இளைஞர்களுக்கு வேலை வழங்கும் மத்திய அரசின் ‘ரோஜ்கார் மேளா’  திட்டத்தைப்  பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். காணொலி காட்சி மூலம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதி சென்னையில் நடைபெற்றது. அதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்த அண்ணாமலை, “ இந்தியாவில் சிறப்பான மருத்துவர்கள் இருக்கும் போது வெளிநாட்டிற்கு செல்ல வேண்டியதில்லை என சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் சொல்லியதில் என்ன தவறு இருக்கிறது. ஆறுமுகசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி எடப்பாடி பழனிசாமி தொலைக்காட்சியில் பார்த்துத் தெரிந்து கொண்டதாக அவர் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது.  அந்த சம்பவங்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடந்தவை. துப்பாக்கிச் சூடு நடத்தியது தவறில்லை. நடத்திய விதம்தான் தவறு.  எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்தை அருணா ஜெகதீசன் ஆணையம் திரித்துக் கூறியிருக்கிறது. ஈபிஎஸ் கவனக்குறைவாக இருந்தார் எனக் கூறுவதும் தவறு. 

கையில் ஒரு கல்லை எடுத்து அரசு சொத்துகளைச் சேதப்படுத்தினால் எங்கள் அகராதியில் அவர்கள் சமூக விரோதி. எனவே பொதுச் சொத்துக்களைச் சேதாரம் செய்தவர்களைத்தான் நாங்கள் சமூக விரோதி என்கிறோம். அந்த வகையில்தான் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். திருமாவளவன், சீமான், கனிமொழி, ஸ்டாலின் இவர்களெல்லாம் கருத்துச் சொல்லவில்லையா? ரஜினிகாந்த் கருத்து பற்றி ஆணையம் சொல்லி இருக்கும் கருத்துகளை நாங்கள் கண்டிக்கிறோம்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in