`காலணி வீசப்பட்டதால் நிதியமைச்சரின் தவறு திசை திருப்பப்பட்டுவிட்டது'- சொல்கிறார் அண்ணாமலை

`காலணி வீசப்பட்டதால் நிதியமைச்சரின் தவறு திசை திருப்பப்பட்டுவிட்டது'- சொல்கிறார் அண்ணாமலை

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணி வீசப்பட்டதால் அவரது செய்த தவறு திசை திருப்பப்பட்டுவிட்டது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சமீபத்தில் நான் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதற்கு மதுரை மாவட்ட தலைவர் சுசீந்திரன் விளக்கம் அளித்து இருக்கிறார். ஏற்கெனவே இதைப்பற்றி நான் மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறேன். அதாவது மதுரை விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தில் நடந்தது விரும்பத் தகாத ஒரு சம்பவம். அந்த சம்பவம் உருவாகும் சூழ்நிலையை ஏற்படுத்தியவர் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். அப்போது மதுரை மாநகர் மாவட்ட தலைவராக இருந்த சரவணன் தொலைபேசி மூலமாக என்னை அழைத்து ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்றார்.

மதுரை விமான நிலையத்தில் நமது தொண்டர்களுக்கும் அமைச்சருக்கும் இடையே தகராறு நடந்திருக்கிறது என்று கூறினார். நான், மதுரை மாவட்ட தலைவரிடம் உயிரிழந்த ராணுவ வீரரின் இறுதி அஞ்சலியை பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லி இருந்தேன். ஒரு பக்கம் புறநகர் மாவட்ட தலைவர், ராணுவ வீரரின் கிராமத்திற்கு வந்து நான் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று அழைத்தார். மதுரை மாநகர் மாவட்ட தலைவர், விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று அழைத்தார். இந்த சம்பவம் நடந்த பிறகு நான் விமான நிலையத்தில் வந்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்று சொன்னார்கள். அப்போது என்னுடைய காரில் பயணம் செய்த புறநகர் மாவட்ட தலைவர், புறநகருக்கு நான் வரவேண்டும் என்று வற்புறுத்தியதோடு, இந்த விவகாரத்தில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அரசியல் செய்து இருக்கிறார். இந்த நேரத்தில் நீங்கள் அங்கே வந்து அஞ்சலி செலுத்தினால்தான் அங்கே இருக்கிற தொண்டர்களுக்கு நாம் கொடுக்கக்கூடிய மரியாதையாக இருக்கும் என்றார்.

இந்த இரண்டும் நடந்த வேலையிலே நான் எடுத்த முடிவு, மதுரை விமான நிலையத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த வேண்டும். அதன் பிறகுதான் கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதற்குள் விரும்பத்தகாத செயல் நடந்திருக்கிறது. அமைச்சர் செய்த செயல் காணாமல் போயிருக்கிறது. அஞ்சலி செலுத்த வந்த பொதுமக்களை, ஒரு கட்சியின் தொண்டர்களை பார்த்து அமைச்சர் அநாகரிமாக பேசியதே இந்த சம்பவத்துக்கு காரணம். அதே நேரத்தில் நான் தெளிவாக இருக்கிறேன். ஒரு அரசியல் தலைவராக எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பணி, மக்கள் மன்றத்தில் ஏதாவது இருந்தால்கூட எடுத்துச் செல்ல வேண்டும். அமைச்சர் பி.டிஆர் தவறு செய்திருந்தால் அதை மக்கள் மன்றத்தில் வைப்பது எனது கடமை. அது அரசியல்தான். அதை அரசியல் செய்துதான் ஆக வேண்டும். ஒருவர் தவறு செய்யும்போது அதை மக்கள் மன்றத்தில் வைப்பது அரசியல் தான். என்னுடைய நிலைப்பாடு அமைச்சரை எதிர்த்து பாரதி ஜனதா தொண்டர்கள் அங்கு தர்ணாவில் ஈடுபட்டிருக்க வேண்டும். பத்திரிகை நண்பர்களை சந்தித்து இருக்க வேண்டும். மதுரை மக்களிடம் முறையிட்டிருக்க வேண்டும். அது அரசியல். அது மக்கள் மன்றத்திற்கு வந்து சேரும். ஆனால் யாரோ இரண்டு பேர் கோபத்தில் செருப்பு எடுத்து வீசியபோது அதனுடைய தன்மை மாறிவிட்டது. உண்மை மாறிவிட்டது.

பின்னாடி என்ன நடந்தது என்பது வேறு பக்கம் திசை திருப்பப்பட்டுவிட்டது. புறநகர் மாவட்ட தலைவரிடம் நான் பேசினேன். நான் என்ன பேசினேன் என்பதை வெட்டி ஒட்டி அதில் சில வார்த்தைகளை எடுத்துவிட்டு அதை போட்டுவிட்டார்கள். அவர்கள் போடத்தான் செய்வார்கள். அரசியலில் இது சகஜம்தான். இதற்காக நான் பேசுவதை நிறுத்திக் கொள்ள முடியாது. எனது பணியை மாற்றிக் கொள்ள முடியாது. அதைத் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருப்பேன். அந்த ஆடியோவை திமுகவினர் முழுமையாக வெளியிட்டால், அதில் குறிப்பாக பி.டி.ஆர் என்ன வார்த்தை பயன்படுத்தினார் என்பது தெரியும். தொடர்ந்து பல உண்மைகள் வரத்தான் போகிறது" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in