`அண்ணாமலையை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்'

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அ.தி.ம.மு.க. புகார்
`அண்ணாமலையை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்'

தனது ட்விட்டர் பக்கத்தில் "பறையா" என்ற வார்த்தையைப் பயன்படுத்தி பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 30-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் "பறையா" என்ற வார்த்தையை பயன்படுத்தி பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது பேச்சாலும், பதிவுகளாலும் சாதி, மதக் கலவரத்தை தமிழகத்தில் தூண்டி விடும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், அவர் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும், தகவல் தொழிற்நுட்பச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அ.தி.ம.மு.க சார்பில் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.ம.மு.க பொதுச் செயலாளர் பசும்பொன் பாண்டியன், அமைதிப் பாதையில் சென்றுகொண்டிருக்கும் தமிழகத்தில் சாதி, மத மோதல்களை தூண்டிவிடும் வகையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பிரச்சாரங்கள் செய்து வருவதாகவும், ஆதாரமற்ற பல விவகாரங்களில் அண்ணாமலை தலையிடுவது வாடிக்கையாகி விட்டதாகவும் கூறினார்.

குறிப்பாக மாணவி லாவண்யா உயிரிழப்பு வழக்கிலும் அடிப்படை ஆதாரமில்லாமல் அண்ணாமலை உண்மைக்குப் புறம்பான பல தகவல்களை வெளியிட்டதாக தெரிவித்த அவர், அந்த வழக்கு தற்போது பிசுபிசுத்துப் போனதாகவும், ஆனால் அண்ணாமலை தொடர்ந்து கலவரத்தை தூண்டும் விதமாக செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த 30-ம் தேதி பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால சாதனையை வெளிப்படுத்தும் விதமாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் "பறையா" என்ற வார்த்தையைப் பயன்படுத்தி குறிப்பிட்ட சமுதாய மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும், அண்ணாமலை தமிழக அரசியல் காலத்தில் கால்வைத்து இன்றுடன் 19 மாதம், 7 நாட்கள் ஆகிறது. அவருக்கு தமிழக அரசியல் பற்றி என்ன தெரியும், அவர் ஒரு குறைபிரசவம், அதனால் தான் அறைகுறையாக பேசி வருகின்றார். தமிழ் மண்ணில் அவரது ஆர்எஸ்எஸ் சங்கிதனம் எல்லாம் எடுபடாது என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in