ஆளுநரை சந்தித்து பாஜக தலைவர்கள் என்ன பேசினார்கள்?: அண்ணாமலை பரபரப்பு பேட்டி

ஆளுநரை சந்தித்து பாஜக தலைவர்கள் என்ன பேசினார்கள்?: அண்ணாமலை பரபரப்பு பேட்டி

தமிழக பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன் தலைமையில் ராஜ்பவனில் கவர்னரை சந்தித்தார்கள். அப்போது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், " கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆணடு வரை தமிழகத்தின் போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து கழகங்களில் வேலைக்கு ஆள் எடுக்கும்போது, பணம் வாங்கிக்கொண்டு வேலை கொடுத்ததாக, அந்த துறையின் அதிகாரியே வழக்குப் பதிவு செய்கிறார்கள். செந்தில் பாலாஜி உள்ளிட்ட நான்கைந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்கு பற்றி முதன் முதலில் தற்போதைய முதல்வர் ஸ்டாலின்தான் பேசினார். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, யாரெல்லாம் குற்றம் சுமத்தினார்களோ அவர்கள் எல்லாம் உச்ச நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்கிறார்கள். அதில், செந்தில் பாலாஜியிடம் கொடுத்த பணத்தை அவர் திருப்பி தந்துவிட்டார், எனவே, அந்த வழக்கை வாபஸ் பெறுகிறோம் என கூறியிருந்தனர்.

இதை எதிர்த்து, மின் துறையில் தேர்வு எழுதிய 2 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில். மாநில அரசுக்கு குட்டு வைத்திருக்கிறது. இந்தியாவிலேயே முதன் முதலாக ஒரு ஊழல் தடுப்பு வழக்கில் அமைச்சர் ஒருவர் பணம் வாங்கியதாக ஒப்புக்கொண்டிருக்கிறார், பணம் கொடுத்த 2 பேர் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பணம் வாங்கிக்கொடுத்த ஒரு புரோக்கர் ஒப்புக்கொண்டிருக்கிறார். அதன்பின்னர், நாங்கள் மனசு மாறிவிட்டோம், வழக்கு போடாதீர்கள் என அவர்களே உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக கொடுத்திருக்கிறார்கள். இந்த வழக்கிற்கு இதைவிட என்ன வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

அனைத்து விதமான தரவுகளையும் பார்க்கும்போது உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தமிழக காவல்துறை உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். அதனால்தான் பாஜக தலைவர்கள் ஆளுநரைச் சந்தித்துள்ளனர். அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in