என் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன் - அண்ணாமலை அதிரடி

அண்ணாமலை
அண்ணாமலை என் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன் - அண்ணாமலை அதிரடி

என் கருத்தில் ஆதரவு, எதிர்ப்புகள் இருந்தாலும் எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று அதிமுகவுடனான உறவு குறித்து சூசகமாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்

தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டாம்,  அப்படி வைத்தால் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து தான் ராஜினாமா செய்து விடப் போவதாக பேசியதாக தகவல்கள் வெளியானது.  இது அதிமுக மற்றும் பாஜக வட்டாரத்தில் மட்டுமல்லாமல் தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் அதிமுக கூட்டணி குறித்து  அண்ணாமலை கூறி இருப்பது அவரது சொந்த கருத்து என்று பாஜகவை சேர்ந்த நையினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று சென்னையில்  செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

""கட்சிக்குள் நான் பேசியதாக கூறப்படும் கருத்து விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது அது நல்லது தான்.தேர்தலை சந்திப்பதை குறித்து என் நிலைப்பாட்டை கூறுகிறேன் அவ்வளவுதான். 50 சதவீத பேருக்கு உடன்பாடும் 50 பேருக்கு எதிர் கருத்தும் இருந்தாலும் எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன்.  

நான் எந்த அரசியல் கட்சிக்கும்,  அரசியல் தலைவருக்கும் எதிரி இல்லை.  தேர்தலை சந்திப்பது குறித்து என் நிலைப்பாட்டை கூறுகிறேன்.  தேர்தலுக்கு பணம் செலவு செய்யும் அரசியல் எனக்கு தேவையில்லை,  வாக்குக்கு பணம் கொடுத்து வெல்வது ஏற்புடையதல்ல எனும் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன்.

காவல் அதிகாரியாக சிறுக சிறுக சேர்த்த பணத்தை அரவக்குறிச்சி தேர்தலில் செலவு செய்தேன். அதனால் தற்போது கடன்காரனாக இருக்கிறேன்.

என்னுடைய கருத்து குறித்து டெல்லி மேலிட தலைவர்களிடம் பேசி வருகிறேன்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்ற தனது  கருத்தை இன்று மறைமுகமாக உறுதி செய்துள்ள அண்ணாமலை கூட்டணி குறித்து முடிவெடுக்க தனக்கு அதிகாரம் இல்லை, கூட்டணி குறித்து கட்சியின் மத்திய தலைமை தான் முடிவு எடுக்கும் என்பதையும் இன்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.  இதனால் அவரது கருத்துக்கு  பாஜக தலைமை ஆதரவு அளிக்கவில்லை என்றும், அதிமுகவுடன்  கூட்டணி தொடரவே பாஜக முடிவு செய்திருப்பதாகவும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in