ஆன்லைன் சூதாட்ட பலிகளுக்கு ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்: தமிழக அமைச்சருக்கு அண்ணாமலை பதிலடி

ஆன்லைன் சூதாட்ட பலிகளுக்கு ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்: தமிழக அமைச்சருக்கு அண்ணாமலை பதிலடி

ஆளும் திமுக அரசின் திறனின்மை மற்றும் மெத்தனப் போக்கினால் அவசர சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் எட்டு உயிர்கள் பலியானதற்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா குறித்து விளக்கம் அளிக்கத் தமிழக ஆளுநர் ரவியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று சந்தித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, "ஆன்லைன் சூதாட்ட தடை குறித்து தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் தருவது பற்றி ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளோம். ஆளுநரும், அந்த மசோதா என்னுடைய பரிசீலனையில் இருக்கிறது, அதில் உள்ள சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டு ஒப்புதல் தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார். அவசரச் சட்டம் இயற்றப்பட்ட போது ஆன்லைன் ரம்மியால் 17 பேர் வரை தற்கொலை செய்து கொண்டனர். ஆனால் இப்போது 25 உயிர்களை ஆன்லைன் ரம்மியால் இழந்திருக்கிறோம். எனவே, விரைவில் இந்த சட்ட மசோதாவைப் பரிசீலனை செய்து ஒப்புதல் தர வேண்டும் என்று ஆளுநரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம் ” என்றார்.

அமைச்சரின் கருத்து குறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், “இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த திமுக அரசின் சட்டத்துறை அமைச்சரான ரகுபதி, ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யக் கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார். அரசாணை பிறப்பிக்காமல் அவசரச் சட்டம் இயற்றி என்ன பயன் என்று தமிழக பாஜக முன் வைத்த கேள்வியை அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறோம். தங்கள் திறனற்ற தன்மையை மறைக்க பொய்களைப் பரப்பி தமிழக ஆளுநரின் மேல் பழியை போட்டுக் கொண்டிருந்த திமுகவினர் வெட்கி தலை குனிய வேண்டும்.

ஆளும் திமுக அரசின் திறனின்மை மற்றும் மெத்தனப் போக்கினால் அவசரச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் எட்டு உயிர்கள் பலியானதற்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் ” என்று பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in