பிரதமர் முன்பு அதிரடியாக பேசிய முதல்வர் ஸ்டாலின்: கொந்தளிக்கும் அண்ணாமலை

அண்ணாமலை
அண்ணாமலை

தமிழ்நாட்டில் 31,500 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களைத் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதமரை நேரில் வைத்துக் கொண்டே மத்திய அரசால் கிடப்பில் கிடக்கும் பல்வேறு கோரிக்கைகளை செயல்படுத்த வேண்டி முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கோரிக்கை விடுத்தார். இதனால் மோடி கடுகடுத்த நிலையிலேயே காணப்பட்டார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

விழாவில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சிக்குப் பொருளாதாரத்திற்கும் அளிக்கக் கூடிய பங்கிற்கு ஏற்ப ஒன்றிய அரசும் திட்டங்களிலும் நிதியிலும் தங்களது பங்களிப்பை உயர்த்த வேண்டும். அதுதான் கூட்டுறவு கூட்டாட்சியாக அமையும். கச்சத்தீவினை மீட்டெடுத்து தமிழக மீனவ மக்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் அவர்களின் உரிமையை நிலை நாட்ட இது தகுந்த தருணம். 15.05.2022 வரை தமிழகத்திற்கு வரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையான 14,006 கோடி ரூபாயை விரைந்து வழங்க வேண்டும். தமிழ் மொழியை இந்திக்கு இணையான அலுவல் மொழியாகவும், உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும். மருத்துவ மாணவர் சேர்க்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நுழைவுத் தேர்வை விலக்கு மசோதாவிற்கு அனுமதி அளிக்க வேண்டும்” என மேடையிலேயே பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்தார்.

விழா முடிந்ததும் மோடியை வழியனுப்பி வைத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். “தமிழகத்தின் வளர்ச்சிக்காகப் பல முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்கப் பிரதமர் மோடி வந்துள்ளார். தமிழக முதல்வர் நடந்து கொண்ட விதம் ஒரு மாநில முதல்வர் எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதைக் காட்டுகிறது. பிரதமரை மேடையில் அமரவைத்துவிட்டு முதல்வர் பேசிய பேச்சு, அவரின் அரசியல் நாடகத்தை வெளிப்படுத்தியது. கச்சத்தீவைத் தாரை வார்த்துவிட்டு என்ன தைரியத்தில் பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை வைக்கிறார். கச்சத்தீவை மீட்டுத்தரக் கோரிக்கை வைக்கும் தகுதி மு.க.ஸ்டாலினுக்கு கிடையாது.

எப்படி ஜிஎஸ்டி கவுன்சில் நடக்கிறது என்பது கூட தெரியாமல், முதல்வர் பேசியது தமிழகத்தை அவமானப்படுத்துவது போல் இருக்கிறது. தமிழகம் மத்திய அரசுக்குக் கொடுக்க வேண்டிய பணம், 25 ஆயிரம் கோடி. இதனை நிதியமைச்சரை மறுக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம். தமிழகத்தையும் இந்தியாவையும் பிரதமர் தரம் பிரித்துப் பார்த்ததில்லை. முதல்வர் பேசியது அனைத்துமே பொய். முன்னுக்குப் பின் முரணான தகவலைப் பேசிவிட்டு திராவிட மாடல் என்கிறார்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in