`மத்திய அரசு வழங்கிய 3 ஆயிரம் கோடி என்ன ஆனது?'- அமைச்சர் அன்பில் மகேஷுக்கு அண்ணாமலை கேள்வி

அண்ணாமலை
அண்ணாமலை`மத்திய அரசு வழங்கிய 3 ஆயிரம் கோடி என்ன ஆனது?'- அமைச்சர் அன்பில் மகேஷுக்கு அண்ணாமலை கேள்வி

"கல்வி உரிமை திட்டத்துக்காக இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசு வழங்கிய நிதி 3,000 கோடி என்ன ஆனது என்பதை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `2030-ம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும், ஒரே மாதிரியான தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளும் சிறப்பான கல்வி பெறவேண்டும் என்ற நோக்கில், அனைவருக்கும் கல்வி உரிமை (RTE) திட்டம் செயல்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடம் ஏழை எளிய மாணவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான கல்விச் செலவை மத்திய அரசே ஏற்றுக்கொள்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுக்கு இதற்கான நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த திட்டத்துக்கு 2021 முதல் 2022 -ம் ஆண்டில் ரூ.1,598 கோடி, 2022 - 2023 ஆண்டுக்கு கடந்த டிசம்பர் மாதம் வரையில் ரூ.1,421 கோடி மத்திய அரசு வழங்கிருக்கிறது.

இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளாக, தமிழக பள்ளிகளுக்கு மழலையர் வகுப்பிற்கான நிதி வழங்கப்படவில்லை என்று தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம் சாட்டியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கான கல்வி கட்டணத்தை தமிழக அரசு வழங்காவிட்டால் வரும் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக வருத்தம் தெரிவித்திருக்கின்றன தனியார் பள்ளி சங்கங்கள். இந்த திட்டத்துக்காக இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசு வழங்கிய நிதி சுமார் ரூ.3,000 கோடி என்ன ஆனது என்பதை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஏழை, எளிய மாணவர்களின்‌ கல்விக் கனவை முடக்க நினைக்கிறது இந்த திறனற்ற தி.மு.க அரசு.

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்

ஏழை, எளிய மாணவர்களுக்கு கிடைக்கும் கல்வி வாய்ப்புகளில் தங்களது மெத்தனத்தை அமைச்சர் காட்டக்கூடாது. உடனடியாக கல்வி கட்டண நிலுவைத் தொகையை பள்ளிகளுக்கு வழங்கி நடப்பு ஆண்டு மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். மேலும் தமிழகம் முழுவதும் பாழடைந்து கிடக்கும் பத்தாயிரத்துக்கும் அதிகமான அரசு பள்ளி கட்டிடங்களை சீரமைக்கப் போவதாக கடந்த ஆண்டு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார், கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலம் ஆகப்போகிறது.

அந்த பள்ளி கட்டிடங்களின் தற்போதைய நிலை என்ன என்பதை அமைச்சர் கூற வேண்டும். அது மட்டுமல்லாது தமிழகத்தை விளையாட்டின் தலைநகராக மாற்றுவோம் என்று அமைச்சர் பதவி ஏற்ற போது உறுதியளித்த விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பல அரசு பள்ளிகளில் தரமான உள்கட்டமைப்பு, விளையாட்டு மைதானங்கள் மற்றும் உபகரணங்களோ இல்லை என்பதை அறிவாரா? அரசு பள்ளிகளை மேம்படுத்த அவர் என்ன நடவடிக்கைகளை இதுவரை எடுத்திருக்கிறார்?

அரசு பள்ளிகளை மேம்படுத்துவதால் தங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்து விடும் என்ற அச்சத்திலும், தங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் பள்ளிகளில், 25 சதவீத இடங்களை ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக ஒதுக்க விரும்பாமல், ஒட்டுமொத்தமாக இந்த திட்டத்தையே முடக்க நினைக்கின்றதோ என்ற வகையில் தி.மு.க அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன. ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பெறுவதை தடுக்க முயற்சிக்காமல் தி.மு.க அரசு உடனடியாக பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். இந்த ஆண்டு கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை உறுதி செய்ய வேண்டும். அரசு பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்ங என வலியுறுத்தியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in