‘கமிஷன் வெளியில் தெரிந்துவிடும் என்று சாராய அமைச்சருக்கு அச்சமா?’- செந்தில் பாலாஜிக்கு அண்ணாமலை கேள்வி

‘கமிஷன் வெளியில் தெரிந்துவிடும் என்று சாராய அமைச்சருக்கு அச்சமா?’- செந்தில் பாலாஜிக்கு அண்ணாமலை கேள்வி

``டாஸ்மாக் குறித்து செய்தி வெளியிடும் பத்திரிகையாளர்கள் மீது வழக்குத் தொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் பத்திரிகையாளர்களை விட்டு விட்டு என் மீது வழக்குத் தொடுங்கள்'' என அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகைக்கு 708 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் கடைகளில் வசூலானதாகச் செய்திகள் வெளியாகின. 600 கோடி என்ற இலக்கை தாண்டி 708 கோடி அளவிற்கு மது விற்பனையானதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பினரும் இதற்குக் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “தீபாவளி முடிந்தவுடன் நிர்வாகத்திற்கே முழு விவரங்கள் வந்து சேராத சூழலில் ‘விற்பனை விவரம்’ என்று பொய்யான தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது. டாஸ்மாக் மீது உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பி வருபவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “கோவையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலைப் பற்றிப் பேச நேரமில்லாத சாராய அமைச்சர், டாஸ்மாக் மூலம் வந்த வருமானத்தைச் சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுப்பாராம். இந்த விற்பனையின் மூலமாக தனக்குக் கிடைக்கும் கமிஷன் வெளியில் தெரிந்துவிடும் என்று சாராய அமைச்சருக்கு அச்சமா? சாராயம் விற்றுப் பிழைப்பை நடத்தும் உங்களுக்கே இவ்வளவு நெஞ்சுரமிருந்தால், மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டு உண்மையான செய்திகளை மக்களுக்குக் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர்களுக்கு எவ்வளவு நெஞ்சுரம் இருக்கும்?

கோபாலபுரத்தின் குடும்ப தொலைக்காட்சியான சன் நியூஸ் இந்த சாராய விற்பனை மூலம் வந்த வருமானத்தைச் செய்தியாக வெளியிட்டுள்ளது. அவர்கள் மீதும் வழக்குத் தொடுப்பீர்களா? அவர்கள் மீது வழக்குத் தொடுத்தாலும், உங்கள் நடவடிக்கைகளுக்கு எதிராகத் தமிழக பாஜக குரல் கொடுக்கும்.  பத்திரிகையாளர்கள் செய்திகள் வெளியிடுவதற்கு முன் அறிவாலயத்தின் அனுமதி பெற வேண்டுமா? அப்படியே உங்களுக்கு வழக்குத் தொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் பத்திரிகையாளர்களை விட்டு விட்டு என் மீது வழக்குத் தொடுங்கள். சாராய அமைச்சரின் இந்த நடவடிக்கை முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் பெயரில் நடக்கிறதா அல்லது சாராய அமைச்சரே தன்னிச்சையாகச் செயல்படுகிறாரா?” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in