சௌமியா அன்புமணியை வாரிசு அரசியல்வாதின்னு சொல்லாதீங்க... அண்ணாமலையின் அட்ராசக்க விளக்கம்!

வேட்புமனு தாக்கல் செய்த சௌமியா அன்புமணி
வேட்புமனு தாக்கல் செய்த சௌமியா அன்புமணி

திமுகவில் வாரிசு அரசியல் தான் பிரதானமாக இருக்கிறது என்று மேடை கண்ட இடமெல்லாம் பிரச்சாரம் செய்துவரும் பாஜக தலைவர் அண்ணாமலை, “பாமகவின் சௌமியா அன்புமணி அரசியலில் வாரிசுகள் என்ற பட்டியலில் வரமாட்டார்” என்று புது விளக்கம் தந்திருக்கிறார்.

மாமனாரிடம் ஆசிபெறும் சௌமியா அன்புமணி
மாமனாரிடம் ஆசிபெறும் சௌமியா அன்புமணி

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மருமகளும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் மகளும், பாமக தலைவர் அன்புமணியின் மனைவியுமான சௌமியா அன்புமணி தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் அவர் நேற்று தனது கணவர் அன்புமணியுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்ததுடன் தொகுதிக்குள் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலையிடம் சௌமியா அன்புமணி போட்டியிடுவது குறித்து  செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “சௌமியா அன்புமணி அரசியல் வாரிசுகள் பட்டியலில் வரமாட்டார்” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.

சௌமியா அன்புமணி
சௌமியா அன்புமணி

"சௌமியா அன்புமணி வாரிசு என்பதை விட அவர் பசுமைத் தாயகம் இயக்கத்தை கட்டமைத்து தொடர்ந்து நடத்தி வருகிறார். பல ஆண்டு காலமாக அதில் செயல்பட்டு வருகிறார். அந்த அமைப்பின் தலைவராகத்தான் அவரைப் பார்க்க வேண்டுமே தவிர, அவரை வாரிசு அரசியல்வாதியாகப் பார்க்கக்கூடாது.  அவர் வாரிசு என்ற அடிப்படையில் 24 வயதிலோ 30 வயதிலோ, ஏன் ஐம்பது வயதில்கூட அரசியலுக்கு வரவில்லை. 

அவர் திருமணம் ஆகி பிள்ளைகள் பெற்று அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தபிறகு அரசியலுக்கு வந்திருக்கிறார். அதனால் அவர் வாரிசு அல்ல. திமுகவில் உள்ள கே.என்.நேருவின் மகனைப் போலவோ,  டி.ஆர்.பாலுவின் மகனைப் போலவோ அவரை வாரிசு என்று சொல்லக்கூடாது.  தயவு செய்து அப்படி ஒப்பிடாதீர்கள்” என்று நீண்ட விளக்கம் கொடுத்தார் அண்ணாமலை. 

ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிடுவது  குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது அவரும் இப்படித்தான் ஜெயவர்தன் வாரிசு அடிப்படையில் வர மாட்டார் என்று தெரிவித்தார். ஆக வாரிசு அரசியல் என்பதற்கு கட்சிக்கு ஒரு இலக்கணம், ஆளுக்கு ஒரு இலக்கணம் தமிழக அரசியலில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பேசிக் கொள்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in