
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஒருவரையொருவர் சந்திக்க நேர்ந்தது. அப்போது மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து அண்ணாமலை கேட்டறிந்தார்.
அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருப்பவர்கள் நேரில் சந்தித்துக் கொள்ளும் நிகழ்வுகள் தமிழகத்தில் அரிதாகத்தான் நடைபெறும். விஐபிக்களின் திருமணம் மற்றும் துக்க நிகழ்வுகளில் கூட ‘அந்த தலைவர் எப்போது வருகிறார்?’ எனக் கேட்டு தன்னுடைய நிகழ்ச்சிகளை மாற்றிக் கொள்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது.
வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் அவர்களின் தாயார் புஷ்பா நேற்று காலமானார். அவரது உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஐசரி கணேஷ் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், திரைத்துறையினர், கல்லூரி நிர்வாகத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் அங்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதன்படி, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை நேற்று மாலை புஷ்பாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினும் அஞ்சலி செலுத்த அங்கு வந்திருந்தார்.
அஞ்சலி செலுத்திய பின்னர், இருவரும் ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். அப்போது, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல் நலன் குறித்து அண்ணாமலை உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்.