திமுக மீது புகார்: ஆளுநரைச் சந்தித்த அண்ணாமலை

திமுக மீது புகார்: ஆளுநரைச் சந்தித்த அண்ணாமலை
ஆளுநரைச் சந்தித்த அண்ணாமலை

திமுக அரசு மக்கள் நலத்திட்டங்களில் கவனம் செலுத்தும் அதேநேரத்தில், தனது கொள்கை சித்தாந்தங்களையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஆட்சி நடத்துகிறது. ஒருபுறம் மகளிருக்கு இலவச பேருந்துப் பயணம், மாற்றுத் திறனாளிகள் திருமணத்துக்கு அறநிலையத் துறை கோயில் மண்டபங்கள் இலவசம் என்று அறிவிக்கிற அதேநேரத்தில், நீட் தேர்வுக்கு எதிராகவும், சிஏஏவுக்கு எதிராகவும் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வற்புறுத்தியதுடன், மத்திய அணைப் பாதுகாப்புச் சட்டத்துக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. இதனால், தமிழக பாஜக முழுக்க முழுக்க திமுக எதிர்ப்பு அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது.

சமூக ஊடகங்களில் பாஜகவை ஆதரித்ததுடன், பெண் ஊடகவியலாளர்களை கொச்சையாக வசைபாடிய கிஷோர் கே.சாமி ஏற்கெனவே குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களைத் தொடர்ந்து வசைபாடியதுடன், சிறுபான்மையினரையும், பத்திரிகையாளர்களையும் அவதூறாகப் பதிவிட்டுவந்த மாரிதாஸையும் போலீஸார் கைது செய்தனர்.

முப்படைத் தளபதி விபத்து விஷயத்தில், அவதூறாகவும், அரசு மீதும், சிறுபான்மையினர் மீதும் கோபம் வரும்படியான கருத்தை அவர் பதிவிட்டதாலேயே கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தனர். ஆனால், முதுகுளத்தூர் மாணவரின் காவல் சித்ரவதைக்கு எதிராகப் பதிவிட்டதாலேயே அவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர் என்று குற்றம்சாட்டிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, முப்படைத் தளபதியின் மரணத்தை கொச்சைப்படுத்திப் பதிவிட்ட திமுகவினர் மற்றும் இஸ்லாமியர்கள் மீது இந்த அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். தமிழக பாஜகவினர் தமிழகத்தில் குண்டராட்சி நடப்பதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவியும் #TN_Goondas_Rule என்ற ஹேஷ்டேக்கை தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார்.

இந்தச் சூழலில், இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து ஒரு மனு கொடுத்தார். பாஜக ஐடி விங் நிர்வாகிகளை குறிவைத்து திமுக கைது செய்வதாகவும், இதுவரையில் 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும், தமிழகத்தில் குண்டராட்சி நடைபெறுவதாகவும் அவர் அந்தப் புகாரில் கூறியிருக்கிறார்.

அண்ணாமலையும் முன்னாள் காவல் துறை அதிகாரி, ஆளுநரும் முன்னாள் காவல் துறை அதிகாரி என்பதால் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுவதாகச் சொல்கிறார்கள் பாஜகவினர்.

மாரிதாஸ் தங்கள் கட்சி உறுப்பினரே இல்லை என்று இதுநாள் வரையில் கூறிவந்த பாஜக, இப்போது அவருக்காக ஆளுநர் வரை போவது ஏன்? அப்படியானால், அவர் இதுவரையில் பரப்பிய அவதூறுகள் எல்லாம் பாஜக திட்டமிட்டுப் பரப்பிய அவதூறுகள் தானா? என்று திமுகவினர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்புகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in