யுடியூப்பர் மாரிதாஸ் உடன் அண்ணாமலை சந்திப்பு

பாஜகவில் புதிய பொறுப்பு வழங்கப்படுகிறதா?
யுடியூப்பர் மாரிதாஸ் உடன் அண்ணாமலை சந்திப்பு
மாரிதாஸ், அண்ணாமலை

யுடியூபர் மாரிதாஸை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். பாஜகவில் மாரிதாஸுக்கு பொறுப்பு வழங்கப்படும் வாய்ப்பிருப்பதாக இந்த சந்திப்புக்கு பின்னே மாரிதாஸ் ஆதரவாளர்கள் ஆருடம் சொல்கின்றனர்.

யுடியூப், முகநூல் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் தொடர்ந்து பாஜக ஆதரவு வீடியோக்களை வெளியிட்டுவருபவர் மாரிதாஸ். திமுகவுக்கு எதிராக இவர் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு அதிக பின் தொடர்பவர்களைப் பெற்று உள்ளார். வீடியோ தளத்திற்கு வருவதற்கும் முன்பே ‘நான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்’ என்ற தலைப்பில் புத்தகத்தையும் எழுதியிருந்தார் மாரிதாஸ். ரஜினிகாந்தையும் நேரில் சந்தித்து இந்தப் புத்தகத்தை வழங்கியிருந்தார். மாரிதாஸ் வீடியோக்கள் இந்து இயக்கத்தினர் மத்தியில் அதிகளவில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார் ஊடகவியலாளரும், யூடியூபருமான மதன் ரவிச்சந்திரன். பாஜக ஆதரவு தளத்திலேயே இயங்கிவந்த மதன் ரவிச்சந்திரன் திடீரென பாஜக பிரமுகர் கே.டி.ராகவன் குறித்து வெளியிட்ட வீடியோ கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடனான தனது உரையாடலையும் வெளியிட்டார். இதன் எதிரொலியாக மதன் ரவிச்சந்திரனை பாஜகவில் இருந்தே நீக்கினார் அண்ணாமலை. இப்படியான அரசியல் சூழலில், யுடியூபர் மாரிதாஸை பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதில் தொடர்ந்து பாஜக ஆதரவு செய்தி, வீடியோக்களை அதிகளவில் வெளியிடுவது, திராவிடத்தை வீழ்த்துவது ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதனிடையே மாரிதாஸ்க்கு பாஜகவில் பொறுப்பு கொடுக்கவும் வாய்ப்பு இருப்பதாக மாரிதாஸ் ஆதரவாளர்கள் கொண்டாடுகின்றனர். சமீபகாலமாக மாரிதாஸ் தனது வீடியோக்களுக்கு வாசகர்கள் நிதி பங்களிப்பு செய்யும்மாறும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் மாரிதாஸின் ஊடக பணிக்கும் பாஜக பங்களிப்பு செய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.