
சாம்பலில் இருந்து எழுந்த பீனிக்ஸ் பறவைக்கு நிகரானவர் என்று குஷ்பூவை புகழ்ந்து வாழ்த்தியிருக்கிறார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. மேலும் குஷ்பூவை அவர் ’அக்கா’ என்றும் அன்போடு விளித்திருக்கிறார்.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பூ, அண்மையில் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக பொறுப்பேற்றார். தொடர்ந்து பத்திரிக்கையாளர் பர்கா தத் உடனான பெண் மைய நிகழ்ச்சி ஒன்றில் அதிர்ச்சிகரமான தகவலை குஷ்பூ வெளியிட்டார்.
தனது 8 வயதில் தொடங்கி 15 வயது வரை பெற்ற தந்தையின் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக அவர் பகிரங்கமாக தெரிவித்திருந்தார். தன்னுடைய புகாரை பெற்ற தாய்கூட புரிந்துகொள்ளவில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்திருந்தார். குஷ்பூவின் இந்த பேச்சும், வருத்தமும் பரவலாக கவனம் பெற்றதோடு, குழந்தை வளர்ப்பு குறித்த விழிப்புணர்வுக்கான விவாதத்தையும் தொடங்கியுள்ளது.
இதனையொட்டியே, பாஜக மாநிலத் தலைவரான அன்ணாமலை குஷ்பூவை விதந்தோதி ஒரு பதிவு வெளியிட்டிருக்கார். அதில் சாம்பலில் இருந்து மீண்டெழுந்த ஃபீனிக்ஸ் பறவைக்கு இணையாக குஷ்பூவை அவர் புகழ்ந்திருக்கிறார். மேலும், ’குழந்தைப் பருவத்தின் அதிர்ச்சியை உள்ளுக்குள் புதைத்துக்கொண்டு, இந்த உயரத்தை நீங்கள் எட்டியிருப்பது சாதாரணமானதல்ல. மென்மேலும் உங்களுக்கு சக்தி சேரட்டும் குஷ்பூ அக்கா’ என்றும் வாழ்த்தியிருக்கிறார்.
அண்ணாமலையை சுற்றும் அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியில் அவர் குஷ்பூவை அக்கா என்று விளித்து ஆதுரத்துடன் வாழ்த்தியிருப்பது பொதுவெளியில் கவனம் ஈர்த்திருக்கிறது.