`மோதலுக்கு அண்ணாமலை, எல்.முருகன்தான் காரணம்'- டிஜிபியிடம் விசிக புகார்

`மோதலுக்கு அண்ணாமலை, எல்.முருகன்தான் காரணம்'- டிஜிபியிடம் விசிக புகார்

கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற விசிகவினருடன் மோதலில் ஈடுபட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொது செயலாளர் வன்னியரசு, தமிழக டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வன்னியரசு, "அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக அம்பேக்தர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்து போது பாஜகவைச் சேர்ந்த சிலர் அந்த இடத்தில் பாரத் மாதா கி ஜெ, ஜெய் ஸ்ரீ ராம், வேல் வேல் வெற்றிவேல் என கோஷம் எழுப்பி பிரச்சினையை ஏற்படுத்தினர்.

திட்டமிட்டு வன்முறையை நடத்த வேண்டும், கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பாஜகவைச் சேர்ந்த சிலர் அங்கு செயல்பட்டனர். வன்முறையின் மூலம் கட்சியை வளர்க்க வேண்டும் என முடிவெடுத்து நேர்மை இல்லாமல் தமிழக பாஜக செயல்பட்டு வருகிறது. இதேபோல் கோவை விமான நிலையத்திலும், பாஜகவினர் முழக்கங்களை எழுப்பி பிரச்சினையை கிளப்பி உள்ளனர்.

பாஜக தமிழகம் முழுவதும் திட்டமிட்டு இந்த வேலையை செய்து வருகிறது. இதற்கு காரணமானவர்கள் மீது டிஜிபி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் வன்முறையை ஏற்படுத்துபவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பிரச்சினைக்கு பின்புலமாக செயல்பட்டு வருகின்றனர். இதனை காவல்துறைக்கு உணர்த்தும் வகையில் டிஜிபி சைலேந்திர பாபுவை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளோம். அண்ணாமலை, எல். முருகனும் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளோம். கோயம்பேட்டில் நடந்த சம்பவம் தற்செயலாக நடந்தது அல்ல. தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்க பாஜகவில் உள்ள ரவுடிகள் மீது நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும். அதேபோல், வேலூர் மாவட்டம் காட்பாடியில், சரத்குமார் என்பவர் இறப்புக்கு காரணமான காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக்கை கைது செய்ய வேண்டும்" என்று கூறினார்.

Related Stories

No stories found.