‘அப்போது கிரிமினல்களைப் பிடிக்கவில்லை... இப்போது கிரிமினல்களைச் சேர்க்கிறார்!’ : அண்ணாமலையை விளாசும் திமுக எம்.பி

‘அப்போது கிரிமினல்களைப் பிடிக்கவில்லை... இப்போது கிரிமினல்களைச் சேர்க்கிறார்!’ : அண்ணாமலையை விளாசும் திமுக எம்.பி

“பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த போது எத்தனை கிரிமினல்களைப் பிடித்தார் என்று தெரியவில்லை. ஆனால், இப்போது இங்கு உள்ள கிரிமினல்களை எல்லாம் பிடித்து பாஜகவில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்” என்று திமுகவின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி கூறியுள்ளார்.

கடலூர் கிழக்கு மாவட்டம், சிதம்பரம் நகர திமுக சார்பில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இக்கூட்டத்தில் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி பேசுகையில், “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த போது எத்தனை கிரிமினல்களைப் பிடித்தார் என்று தெரியவில்லை. ஆனால், தமிழகத்தில் உள்ள கிரிமினல்களை எல்லாம் பிடித்து பாஜகவில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்" என்று குறிப்பிட்டார்.

மேலும், "பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் கருப்பு பணத்தை ஒழித்து விட்டோம் என்றும், வீட்டுக்கு 15 லட்சம் தருவதாக சொன்னார்கள். அது என்ன ஆனது? எங்களது வளர்ச்சி குஜராத் மாடல் வளர்ச்சி என்று பிரதமர் மோடி சொன்னார். ஆனால் அமெரிக்க ஜனாதிபதி குஜராத் வந்தபோது சில பகுதிகளை அவர் பார்க்க கூடாது என்பதற்காக சுவர் அமைத்தார்கள். இது தான் குஜராத் மாடல் வளர்ச்சியா?" என்று கேள்வி எழுப்பினார்.

"பசுவைப் பாதுகாக்கிறார்கள். சம்ஸ்கிருதம், இந்து மதம் போன்றவற்றை பாதுகாக்கிறார்கள். அதே போல குஜராத்தில் உள்ள இரண்டு பணக்காரர்களைப் பாதுகாக்கிறார்கள். மக்களை பாதுகாக்காமல் நடுத்தெருவில் விட்டு விட்டார்கள். இந்த சூழலில் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்டு இருக்கிறது என்றால் அதற்கு தலைவர் மு.க.ஸ்டாலின் தான் காரணம்” என்று டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in