திமுகவுக்கு எதிராக அல்ல; தமிழ்நாட்டுக்கு எதிராகப் பேசும் அண்ணாமலை!

மதுரையில் திருமாவளவன் பேட்டி
திமுகவுக்கு எதிராக அல்ல; தமிழ்நாட்டுக்கு எதிராகப் பேசும் அண்ணாமலை!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தாய் அமைப்பான, பாரதிய தலித் பேந்தர் இயக்கத்தின் தமிழக அமைப்பாளராக இருந்த மறைந்த வழக்கறிஞர் மலைச்சாமி நினைவு தினத்தை முன்னிட்டு, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் இன்று மதுரை வந்தார். அவனியாபுரத்தில் கட்டப்பட்டுவரும் மலைச்சாமி மணிமண்டபத்துக்குள் வைக்கப்பட்டிருந்த மலைச்சாமியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, வீரவணக்கம் செலுத்தினார்.

அந்த நிகழ்வில் பேசிய அவர், ”இந்த மண்ணில் சாதி ஒழிப்பு அரசியலை விதைத்ததில் மாவீரன் மலைச்சாமியின் பங்களிப்பு மகத்தானதாகும். 30 ஆண்டுகளுக்கு முன்பே தலித் பேந்தர்ஸ் என்ற சிறுத்தைகள் இயக்கத்தை கட்டமைத்தை பெருமைக்குரியவர். 1987-ல் வடமாவட்டத்தில் சாதி வெறியர்களால் ஒடுக்கப்பட்ட, ஆதிகுடிகளின் குடிசைகள் தீவைத்து எரிக்கப்பட்டபோது அதைக் கண்டித்து நாடு முழுக்க சுவரொட்டி இயக்கத்தை நடத்தியவர், பதிலுக்கு பதில் நாங்களும் திருப்பியடிக்க வேண்டியதிருக்கும் என்று எச்சரித்தவர் மாவீரன் மலைச்சாமி. மணிமண்டபம் இன்னும் முடிவடையவில்லை. அவரது நினைவு நாளிலேயே அதைத் திறந்துவிட வேண்டும் என்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் இன்னும் பூச்சு வேலை உள்ளிட்ட வேலைகள் பாக்கியிருப்பதால், இன்னும் ஓரிரு மாதத்தில் திறந்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். இருப்பினும் இன்றைக்கு இந்த அரங்கத்திற்குள்ளேயே அண்ணன் படத்தை வைத்து அஞ்சலி செலுத்துவது ஆறுதலைத் தருகிறது. இதுநாள்வரையில் வெட்ட வெளியில் ஒரு பொட்டல்வெளியில் அவரது பட த்தை வைத்து அஞ்சலி செலுத்திய நிலையில் இப்போது அவரது பெயரில் கட்டப்பட்ட ஓர் அரங்கத்திற்குள் நின்று அஞ்சலி செலுத்துகிற சூழல் அமைந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. அண்ணன் அவர்களின் நினைவு நாளில் வீர வணக்கம் செலுத்துவதுடன், அவர் கண்ட கனவை நனவாக்கும் வகையில் சாதி ஒழிப்பை முன்னிறுத்தி நாம் களமாடுவோம், சாதியை ஒழிக்க உறுதியேற்போம்” என்றார்.

முன்னதாக மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், ”நீட் தேர்வுக்கு எதிரான தமிழக சட்டமன்றத் தீர்மானம், தமிழகத்துக்கு நீட் முற்றாகத் தேவையில்லை எனும் இந்த முடிவு ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வழிகாட்டும் துணிச்சலான முடிவு. மாணவர்களின் கனவை சிதைக்கும் நீட்டை விலக்குவதன் மூலம் மாணவச் செல்வங்களை காப்பாற்ற முடியும் என்கிற பொறுப்புணர்வோடும் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக பேசுவதாக நினைத்துக்கொண்டு, தமிழ்நாட்டுக்கு எதிரான கருத்தைச் சொல்லியிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அவர் பல விஷயங்களில் இப்படித்தான் பேசுகிறார். அதிமுக இந்த விஷயத்தில் பாஜகவுக்கு ஒரு முகத்தையும், தமிழக மக்களிடம் இன்னொரு முகத்தையும் காட்டுகிறது. இப்படியே தொடர்ந்தால், அவர்கள் தமிழக மக்களிடம் அம்பலப்பட்டுப் போவார்கள்” என்றார்.

Related Stories

No stories found.