‘அண்ணாமலைக்கு அரசியல் பக்குவம் இல்லை’ -சொல்கிறார் கடம்பூர் ராஜூ

கடம்பூர் ராஜூ
கடம்பூர் ராஜூ

கோவில்பட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ, ’அண்ணாமலைக்கு அரசியல் பக்குவம் இல்லை’ என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரில் கடம்பூர் ராஜூ இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “அரசியலில் ஒரு கட்சியில் இருந்து பிரிந்து இன்னொரு கட்சியில் இணைவது வழக்கமாக ஒன்று. பாஜக ஐடி விங் நிர்வாகி நிர்மல்குமார் அதிமுகவுக்கு வந்ததில் அண்ணாமலையும், பாஜகவினரும் ஏன் பதற்றப்படுகிறார்கள். ஒருவேளை அவர் திமுகவில் இணைந்திருந்தால் என்ன செய்து இருப்பார்கள்?

பாஜகவின் ஐடி விங் நிர்வாகியை அதிமுகவில் சேர்த்ததற்காக கோவில்பட்டியில் ஒரு விளம்பர விரும்பி, ஈ.பி.எஸ் உருவப்படத்தை எரிக்கிறார். இதை அண்ணாமலை கண்டிக்கவும் இல்லை. கட்சி ரீதியாக அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கிறார் எனப் பார்ப்போம். திமுகவுக்கு எதிராக அண்ணாமலை பேசித்தான் வருகிறாரே தவிர, எதிர்வினை ஆற்றவில்லை.

அண்ணாமலை இன்னும் பக்குவப்படவில்லை. தானாக விரும்பிவந்து சேர்வோர்களை எந்தக் கட்சியிலும் சேர்த்துக் கொள்வார்கள். இந்த அரிச்சுவடி கூட பாஜகவுக்குத் தெரியவில்லை. எங்களோடு கூட்டணி சேர்ந்ததால் தான் பாஜகவுக்கு நான்கு எம்.எல்.ஏக்கள் கிடைத்தனர். தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற முடியாது. தமிழகத்தில் அதிமுகவை முந்த எந்த ஒரு இயக்கமும் இல்லை” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in