
சென்னை - கோவை இடையேயான வந்தே பாரத் ரயில், சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் உள்ளிட்ட திட்டங்களைத் தொடங்கி வைக்கச் சென்னை வந்துள்ள பிரதமர் மோடியை வரவேற்கத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வராதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கச் சென்னை வந்துள்ள பிரதமர் மோடியைத் தமிழக ஆளுநர், முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள், பாஜகவின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தமிழக பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை காப்பியத்தைப் பரிசாக அளித்து பிரதமரை வரவேற்றார்.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்காதது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர்களிடம் விசாரித்தோம். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ’’ கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் மேலிட இணைப் பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்குச் சாதகமாக இருக்கும் என பல்வேறு கருத்துக் கணிப்புகளும் தெரிவித்து வரும் நிலையில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவையுள்ளது.
மேலும் சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாக உள்ள நிலையில் அதனை இறுதி செய்யும் வேளைகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ஆனால், பிரதமரை வரவேற்கத் தேவையான நிகழ்ச்சி நிரல்களை அவர் டெல்லியில் இருந்தவாறே வடிவமைத்துக் கொடுத்துள்ளார்’’ என்றனர்.