'அண்ணாமலை சொல்வது அரைவேக்காட்டுத்தனம்! '

ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தார் கே.எஸ்.அழகிரி
'அண்ணாமலை சொல்வது அரைவேக்காட்டுத்தனம்! '

"தமிழக முதல்வரை மன்னிப்பு கேட்க வேண்டுமென்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவதை அரைவேக்காட்டுத்தனமாகவே கருதுகிறேன்" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " தமிழக மக்களுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக தலைமையிலான அரசுக்கும் எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகிறார். இதனால், தமிழக மக்களிடையே ஆளுநர் மீது கடும் எதிர்ப்பும், கொந்தளிப்பான நிலையும் நிலவி வருகிறது.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, மக்களிடையே எழுந்த எதிர்ப்பின் காரணமாக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் செய்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்" என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், " தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 18 மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டு தமிழக அரசை முடக்குகிற நடவடிக்கையை கண்டித்துத் தான் இந்த கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருக்கிறது. ஆளுநருக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்க தவறிவிட்டது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டுகிறார். இதற்காக முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டுமென்று கூறியிருக்கிறார். ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட முறையில் தான் ஆர்ப்பாட்டம் நடைபெற்று இருக்கிறது. இதற்காக முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று அண்ணாமலை கூறுவதை அரைவேக்காட்டுத்தனமாகவே கருதுகிறேன்" என்றார்.

"மத்தியில் ஆட்சி செய்கிறோம் என்ற மமதையில் ஆணவத்தோடு அவர் பேசுவாரேயானால், ஏற்கனவே பாஜகவை தமிழகத்தில் நுழைய விடாமல் எதிர்த்து வருகிற மக்களால், இனி அக்கட்சியை பூதக் கண்ணாடி கொண்டு தேட வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டுமென்று ஆளுநரை நேரில் சந்தித்த முதல்வர் வலியுறுத்தியுள்ளார். மேலும், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரையும் சந்தித்து முறையிட்டுள்ளார். அதன் பிறகும் கூட, அந்த மசோதாவை ஆளுநர் அனுப்பாமல் இருப்பது தமிழக மக்களின் உரிமைகளைப் பறிக்கிற செயலாகும். ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாவை மறுபடியும் சட்டப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பி 72 நாட்களாகியும், அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் முடக்கி வைப்பதற்கு அரசமைப்புச் சட்ட விதி 200-ன்படி அவருக்கு எந்த உரிமையும் இல்லை. அவரது செயல் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது.

தமிழகத்தில் பாஜக தமிழக மக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுமேயானால் அதற்குரிய விளைவுகளை சந்திக்க வேண்டிவரும். தமிழக ஆளுநரின் இத்தகைய ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் ஏப்ரல் 28-ம் தேதி நடத்தப்படும்" என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in