அண்ணாமலை உண்ணாவிரதத்துக்கு அனுமதி கிடைக்குமா?

பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு
பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அண்ணாமலை உண்ணாவிரதத்துக்கு அனுமதி கிடைக்குமா?

திமுக ஆட்சியில் நடைபெறும் தொடர் வன்முறை சம்பவங்களை கண்டித்து பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ள உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி கேட்டு பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீரர் பிரபு நாயக் கொலை, பெரம்பலூர் மாவட்டத்தில் பாஜக பட்டியலின தலைவர் தடா பெரியசாமியின் வீட்டின் மீது தாக்குதல், ஆலந்தூரில் காவலர் கல்லால் அடித்துக்கொலை என திமுக ஆட்சியில் நடைபெற்று வரும் தொடர் வன்முறை சம்பவங்களை கண்டிக்கும் விதமாக வரும் 21-ம் தேதி பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளதால் அதற்கு அனுமதி கேட்டு பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் மற்றும் பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் பால் கனகராஜ் ஆகியோர் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.

அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த கரு.நாகராஜன், "திமுக ஆட்சி என்றாலே வன்முறை என்று அர்த்தம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் அளவில்லாத வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீரரின் கொலை, நங்கநல்லூரில் காவலர் கல்லால் அடித்துக்கொலை, திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை என தினமும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. இதேபோல சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக பிரமுகர் கொலை, பாஜக பட்டியலின தலைவர் தடா பெரியசாமியின் வீடு மீது தாக்குதல் என பாஜக பிரமுகர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறது. ராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை.

திமுக அடையாளத்தை பயன்படுத்தியே அவர்கள் துணிந்து கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை திமுக ஆட்சியில் இருக்கிறது. இந்த அநீதி ஆட்சி மற்றும் அலட்சியமான திமுக ஆட்சியை கண்டிக்கும் விதமாக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் வரும் 21-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. அதன் பின்னர் மெழுகுவர்த்தியுடன் ஊர்வலமாக சென்று போர் நினைவு சின்னத்தில் அஞ்சலி செய்யவுள்ளதால் இதற்கு அனுமதி கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்து இருக்கிறோம். மேலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்கள் குளறுபடி மற்றும் பணப்பட்டுவாடா நடைபெறுகிறது. திமுக இருக்கும் இடத்தில் சுமுகமான தேர்தல் நடைபெறுவது சந்தேகம். திமுக ஆட்சி மோசமான ஆட்சி என்பது பொதுமக்களுக்கே தெரியும்" என கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in