ஆடத் தெரியாதவனுக்கு மேடைக்கோணல்: தமிழக நிதியமைச்சரை விமர்சிக்கும் அண்ணாமலை

ஆடத் தெரியாதவனுக்கு மேடைக்கோணல்: தமிழக நிதியமைச்சரை விமர்சிக்கும் அண்ணாமலை

ஆடத் தெரியாதவனுக்கு மேடைக்கோணல் என்று கிராமங்களில் கூறுவது போல, சரியான முறையில் அரசை நிர்வாகிக்கத் தெரியாதவர், மேடையை கோணல் எனக்கூறுவது போல தமிழக நிதியமைச்சரின் அறிக்கை இருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், " தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய மொத்த ஜிஎஸ்டி தொகை என்பது இன்றைய நிலவரப்படி பூஜ்யம். மே மாதம் கடைசி வரை மொத்தமாக ஜிஎஸ்டி தொகை கொடுத்தாகிவிட்டது.

மத்திய நிதியமைச்சர் கூறியது ஒரே விஷயம்தான், 5 சதவீத ஜிஎஸ்டியை ஏற்றியது நாங்கள் கிடையாது. ஜிஎஸ்டி கவுன்சில்தான். அதில் மாநிலத்தின் நிதியமைச்சரும் அங்கம் வகித்தார். மத்திய அரசு 5 சதவீதம் ஏற்றியுள்ளது. அதை காரணமாக வைத்து மாநில அரசு 20 சதவீதம் ஏற்றியுள்ளது. தயிர் 10 ரூபாயிலிருந்து 12 ரூபாய் ஏற்றியுள்ளதாக கூறி மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் பல ஆதாரங்களைக்கூட தெரிவித்தார். இந்த பொய்யை மூடிமறைத்துவிட்டு தமிழக நிதியமைச்சர் இதுபோன்ற அறிக்கை வெளியிட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது.

ஆடத் தெரியாதவனுக்கு மேடைக்கோணல் என்று கிராமங்களில் கூறுவது போல, சரியான முறையில் அரசை நிர்வாகிக்கத் தெரியாதவர், மேடையைக் கோணல் எனக்கூறுவது போல, நிதியமைச்சரின் அறிக்கை இருக்கிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநில அரசின் பொய்களை தோலுரித்துக் காட்டினார். குறிப்பாக திமுகவின் தேர்தல் அறிக்கை, திமுகவின் தேர்தல் அறிக்கை 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. அதில் பெட்ரோல்,டீசல் விலையை முறையே 5 ரூபாய், 4 ரூபாய் குறைப்போம், சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைப்பதாக கூறியிருந்தார்.

ஆனால், திமுக தேர்தல் அறிக்கை வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக 2021 பிப்ரவரியில் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்திருந்தது. அப்போதே தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் இருந்த டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுகவினருக்குத் தெரிந்திருக்கும். மத்திய அரசு தனது நிதிநிலை அறிக்கையில், எங்கேயுமே பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக கூறவில்லையென்று.

இதன் அடிப்படையில்தான் திமுக தேர்தல் வாக்குறுதியில், பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை குறைப்பதாக கூறினார்கள். இதில் மத்திய அரசின் நிர்பந்தம் எங்கேயும் கிடையாது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையிலும் எங்கேயுமே விலை குறைக்கப்படும் என்று கூறவில்லை. எனவே தேர்தல் வாக்குறுதிப்படி திமுகவால் விலையைக் குறைக்க முடியாதபோது மத்திய அரசை எப்படி குறைகூற முடியும்.

மத்திய அரசு கடந்த 6 மாதத்தில், நவம்பர் 2021 முதல் மே 2022 வரையிலான இந்த 6 மாதத்தில் ரூ.14.50 பைசா பெட்ரோலுக்கு, 17 ரூபாய் டீசலுக்கு குறைத்திருக்கிறது. ஆனால், மாநில அரசு வெறும் 3 ரூபாயை குறைத்துவிட்டு, மத்திய அரசை எப்படி குறைகூறலாம்? தமிழகத்தைவிட புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைந்துள்ளது" என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in