ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியா?- ஹெச்.ராஜா பதில்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியா?- ஹெச்.ராஜா பதில்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவாரா? என்ற கேள்விக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பதில் அளித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "குஜராத்தில் பட்டியலின தொகுதி 40-ல் 34 தொகுதிகளிலும், 27 பழங்குடி தொகுதியில் 23 இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகளின் பாஜக குறித்த பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை மக்கள் நம்பவில்லை.

இமாச்சல பிரதேசத்தில் 500க்கும் குறைவான வாக்குகளால் 10க்கும் மேற்பட்ட தொகுதியில் வெற்றியை தவறவிட்டோம். வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருந்தது. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை முடியும்போது வெறும் 'சோடோ'வாகத்தான் இருக்கும். பயணம் என்ற பெயரில் பாட்டி வீட்டுக்கு சென்று அவ்வப்போது ராகுல் காந்தி ஓய்வு எடுப்பது வழக்கமான ஒன்றுதான்.

தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப்போல திராவிட மாடலை பின்பற்றுபவர்கள் காட்டிக் கொள்கின்றனர். தமிழ்நாட்டில் அமலில் இருப்பது ஸ்டாலின் ஆட்சியா, மாலிக்கபூர் ஆட்சியா எனும் சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது. ஈரோடு இடைத்தேர்தல் குறித்து நாளை கடலூரில் பாஜக செயற்குழு கூடி விவாதித்து முடிவு எடுக்கப்படும். இடைத்தேர்தலுக்காக தேர்தல் பணிக்கு பாஜக சார்பில் குழு அமைத்தது. முதல்கட்ட தேர்தல் பணி, கூட்டணி கட்சி போட்டியிட்டாலும் இதுபோல குழு அமைப்போம். அண்ணாமலை இடைத்தேர்தலில் போட்டியிடுவாரா என்பது குறித்த கற்பனை, வதந்திகளுக்கு நான் பதில் சொல்ல அவசியம் இல்லை.

சிறைக்கு செல்ல உள்ள மூவரில் செந்தில்பாலாஜிக்கு அடுத்த இடத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் இருக்கிறார். ஆவடி நாசர் 6 மாதம் மாடு மேய்த்து பால் கறந்து, ஒரு லிட்டர் பால் 36 ரூபாயில் லாபம் கிடைக்குமா என கூற வேண்டும். அதிமுக சின்னம் குறித்து நான் கருத்து கூற முடியாது. ஈபிஎஸ் - ஓபிஎஸ் இருவரும் செல்வாக்கு கொண்ட தலைவர்கள்தான். இடைத்தேர்தலில் திமுகவை தோற்கடிக்க பொன்னான வாயப்பு அவர்களுக்கு கிடைத்துள்ளது. திமுக இடைத்தேர்தலில் தோற்றல் ஸ்டாலினும், உதயநிதியும் பேசுவதற்கு எதுவுமே இருக்காது.

காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டி உள்ளதால் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்பது அவசியம் இல்லாத கேள்வி. திமுகவில் பெரிய கருப்பன் செய்தது குறித்து யாரும் கேள்வி கேட்க மாட்டீர்கள். நயினார் நாகேந்திரன் சேது சமுத்திர திட்டத்தை ஆதரிப்பதாக சட்டமன்றத்தில் கூறினாரா?. ராமர் பாலத்தை தகர்க்காமல் கட்டினால் ஆதரிப்பதாகத்தான் கூறினார். சுனாமியால் ராமேஸ்வரம் பகுதி பாதிக்கப்படாமல் இருக்க காரணம் ராமர் பாலம்தான். அதை நீங்கள் மணல் திட்டு என்று சொன்னாலும் அதுதான் ராமேஸ்வரத்தை காப்பாற்றியது. சேது சமுத்திர திட்டத்தால் அரசுக்கு பொருளாதார ரீதியாக என்ன பலன் கிடைக்கும் என தெரிவிக்க வேண்டும். புதுக்கோட்டை வேங்கைவயல் பிரச்சினை குறித்து திருமாவளவனே மாநில அரசை குற்றம்சாட்டுகிறார். இது தொடர்பாக கருத்து கூற நான் விரும்பவில்லை" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in