தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை மரணம்: திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்

அண்ணாமலை
அண்ணாமலை

தவறான சிகிச்சை வழங்கியதால் கல்லூரி மாணவி, கால்பந்து வீராங்கனை பிரியா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணமலை தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “அறுவை சிகிச்சையின் போது அரசு மருத்துவர்கள் தவறான சிகிச்சை வழங்கியதால் கல்லூரி மாணவி, கால்பந்து வீராங்கனை சகோதரி பிரியா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திறனற்ற திமுக ஆட்சியில் ஒவ்வொரு அரசு துறையும் அழிந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் மருத்துவ துறையும் சேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது. தவறான சிகிச்சை வழங்கிய அரசு மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். திமுக அரசு, சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நஷ்ட ஈடாக இரண்டு கோடி ரூபாய் அவரது குடும்பத்தாருக்கு உடனடியாக வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

சென்னை வியாசர்பாடி சேர்ந்தவர் பிரியா. 17 வயதான இவர், கால்பந்து வீராங்கனை. விளையாட்டில் அதிக ஆர்வம் காரணமாக தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார். சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்த பிரியா, அங்கு கால்பந்து பயிற்சியும் பெற்று வந்தார். இதனிடையே, பயிற்சியின் போது பிரியாவுக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அப்போது, காலில் தசைப்பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது தெரியவந்து.

இதையடுத்து, மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பிரியா சேர்க்கப்பட்டார். அவருக்கு தசைப்பிடிப்புக்கு அறுவை சிகிச்சை செய்தனர் மருத்துவர்கள். ஆனால் அவருக்கு காலில் வலி குறையவில்லை. இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரியா அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவக் குழுவினர் மாணவிக்கு பரிசோதனை செய்தனர். அப்போது, காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மாணவியின் கால்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதனிடையே, "மருத்துவர்களின் அலட்சிய போக்கு மற்றும் தவறான சிகிச்சை முறையே தங்கள் மகள் காலை இழக்க காரணம். அந்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பெற்றோர் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாணவிக்கு உள்ள காயம் சரியான உடன், பெங்களூருவில் இருந்து செயற்கை கால் வாங்கி பொருத்தப்படும் என்றும் மாணவிக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாணவிக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரியா இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in