`முதல்வர் எங்கு போனாலும் விட மாட்டோம்'- கோட்டையை நோக்கி பேரணி சென்ற அண்ணாமலை தடுத்து நிறுத்தம்

`முதல்வர் எங்கு போனாலும் விட மாட்டோம்'- கோட்டையை நோக்கி பேரணி சென்ற அண்ணாமலை தடுத்து நிறுத்தம்
அண்ணாமலை

பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்கக் கோரி பேரணியாகச் சென்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

பெட்ரோல் விலையை 5 ரூபாயும், டீசல் விலையை 4 ரூபாயும் குறைப்பதாக திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திமுக ஆட்சிக்கு வந்த சிலமாதங்களில் பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டது. பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் கலால் வரியை மத்திய அரசு அண்மையில் குறைத்தது. இந்த நிலையில் தமிழக அரசு கட்டுப்பாட்டில் இருக்க கூடிய மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்க வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டால் கோட்டையை முற்றுகையிடுவோம் என அண்ணாமலை சில தினங்களுக்கு முன்பாகத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று காலைமுதலே நூற்றுக்கணக்கான பாஜகவினர் கூடினர். அவர்கள் மத்தியில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “கோட்டையை நோக்கி பாஜகவினர் பேரணி நடத்தப்போகிறார்கள் எனத் தெரிந்ததுமே முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து எஸ்கேப் ஆகி டெல்டா மாவட்டங்களில் ஆய்வுக்குச் சென்றுவிட்டார். முதல்வர் எங்கே சென்றாலும் அவரை பாஜக விடப்போவது கிடையாது. நீங்கள் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றும் வரை உங்களை விடமாட்டோம்” என்றார்.

பேரணி நடத்தினால் அவர்களைக் கைது செய்ய பத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளோடு, காவல் துறையினர் குவிக்கப்பட்டு தயார் நிலையிலிருந்தனர். கண்டன உரையாற்றிய அண்ணாமலை பேரணியைத் தொடங்கியபோது அங்கிருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால் காவல் துறைக்கும் பாஜகவினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in