அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல்: தனித்துப் போட்டி -அண்ணாமலை அறிவிப்பு

அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல்: தனித்துப் போட்டி -அண்ணாமலை அறிவிப்பு
அண்ணாமலை

கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில், அதிமுக திடீரென வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டதால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப்போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இடப்பங்கீடு தொடர்பாக அதிமுக - பாஜக இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. ஒட்டுமொத்தமாக 25 சதவீத இடங்கள் வரை பாஜக எதிர்பார்ப்பததாகவும், ஆனால், பாஜகவுக்கு 4 முதல் 5 சதவீத இடங்களை மட்டுமே அதிமுக ஒதுக்க வாய்ப்பு இருந்ததாகவும் தகவல் வெளியானது. இதனால், கூட்டணி இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.

இதற்கிடையில், பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், நேற்றிரவு அதிமுக திடீரென வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. அதிமுகவின் இந்த அதிரடி நடவடிக்கை பாஜகவினரை கொந்தளிக்க வைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப்போட்டியிடும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். “பாஜக தொண்டர்களின் குரலுக்கு செவிசாய்த்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தனித்துப் போட்டியிடுவது என்பது கடினமான முடிவு அல்ல. இன்னும் சற்று நேரத்தில் பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்” என்று அண்ணாமலை கூறினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்hindu கோப்பு படம்

அதிமுகவுடனான கூட்டணி இடப்பங்கீட்டில் இழுபறி நீடித்துவந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறித்து அண்ணாமலையிடம் கேட்டபோது, அதிமுகவின் ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆகியோர் நான் நேசிக்கக்கூடிய தலைவர்கள் என்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமே தனித்து போட்டியிடுவதாகவும், ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். “அதிமுக தலைவர்கள் மீது எந்த வருத்தமும் இல்லை. நயினார் நாகேந்திரனின் சர்ச்சை பேச்சுக்கும், கூட்டணி முறிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றும் அண்ணாமலை கூறினார்.

“பாஜக தனித்துப்போட்டியிடுவது என்பது அவர்கள் எடுத்த முடிவு. அதிமுக ஆலமரம், இந்த ஆலமரத்தின் நிழலில் எத்தனையோ கட்சிகள் பலனடைந்துள்ளன. தனித்தன்மையோடு பல தேர்தல்களை சந்தித்து இருக்கிறோம். அதை இந்த தேர்தலில் தொடர்வோம்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதால், அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in