அடுத்து என்ன செய்யப் போகிறார் அண்ணாமலை? - இதுதான் தமிழக பாஜக தொண்டர்கள் தொடங்கி டெல்லி தலைவர்கள் வரைக்கும் முணுமுணுக்கும் கேள்வி. அதிமுகவுடனான கூட்டணியை முறித்தது முதல் பாஜகவின் அகில இந்திய நகர்வுகள் வரை அண்ணாமலையின் ஆர்வமும் கோளாறுமான அரசியல், தமிழக பாஜகவை வெகுவாய் பாதிக்கும் என்ற ஆதங்கம் கட்சியில் எழுந்திருக்கிறது. அண்ணாமலையின் எண்ணமென்ன? அவரை இயக்கும் திண்ணமென்ன?
பதறிய பாஜக தலைமை
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 2024 மக்களவைத் தேர்தல் மிக முக்கியமானது. மூன்றாவது முறையாக மோடி தலைமையிலான ஆட்சியை அமைத்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு, தலை முதல் பாதம் வரை கட்சியினரை முடுக்கிவிட்டிருக்கிறார்கள். இந்த இக்கட்டான சூழலில் கூட்டணியில் பாஜகவுக்கு அடுத்த பெரிய கட்சியான அதிமுக கூட்டணியை முறித்துக்கொண்டதால் டெல்லி தலைமை செய்வதறியாது நிற்கிறது.
உதயநிதியின் சனாதன சர்ச்சையை முன்வைத்து ’இந்தியா கூட்டணி’ உடையுமென காத்திருந்த வேளையில், அண்ணாமலை யால் தங்கள் கூட்டணிக்கு சேதாரம் வந்திருப்பதை டெல்லி தலைமையால் ஜீரணிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் கட்சியை வளர்த்தாக வேண்டும், கட்சிக்கும் கட்சியினருக்கும் தனித்தன்மை வேண்டும் என்றெல்லாம் அண்ணாமலை முன்வைக்கும் வாதங்களை பாஜகவுக்குள்ளேயே பலர் விரும்பவில்லை. இதனால், தற்போதைக்கு கூட்டணி விவகாரத்தில் அண்ணாமலைக்கு வாய்ப்பூட்டு போட்டதோடு, தேசிய அமைப்பு செயலாளார் பி.எல்.சந்தோஷ் கையில் அண்ணாமலையின் லகானை ஒப்படைத்திருக்கிறார்கள்.
தமிழகத்திலிருந்து பாஜக எம்பி-க்கள் உருவாவது மட்டுமன்றி, மத்தியில் ஆட்சி அமையும்போது அவசியப்படுமாயின் அதிமுகவின் ஆதரவை நாடவும் தொலைநோக்கில் டெல்லி தலைமை திட்டமிட்டிருந்தது. அண்ணாமலையின் அதிரடிப்போக்கு அதற்கெல்லாம் குந்தகம் விளைவித்திருக்கிறது. இருப்பினும் தேர்தல் நெருக்கத்தில் எப்படியும் அதிமுக மசிந்துவரும், அல்லது அதற்கான நெருக்கடிகளை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், பாஜக வியூக விற்பன்னர்கள் தீர்மானமாக இருக்கிறார்கள்.
உதறிய அதிமுக தலைமை
திமுகவுடன் நேரடிப்போட்டி என்பதில் அதிமுக தெளிவாக இருக்கிறது. மத்தியில் யார் ஆட்சிக்கு வருவார்கள், அவர்களை எப்படி எதிர்கொள்வது என்பதெல்லாம் அதிமுகவுக்கு இரண்டாம்பட்சம். முதிர்ச்சியற்ற அண்ணாமலையின் அரசியல் போக்கு, மீண்டும் மீண்டும் அதிமுகவை சீண்டியதில் பொறுத்தது போதுமென பொங்கியெழுந்திருக்கிறார்கள்.
இந்த வேகம் தேர்தல் களத்திலும் எதிரொலிக்கும் என்பது அதிமுகவில் வெளிப்படையாக தெரிகிறது. கட்சியின் ஆதாரத் தலைவர்கள், கொள்கை, கோட்பாடு குறித்தெல்லாம் அதிமுகவில் மீண்டும் பேசத் தொடங்கியிருப்பது, கட்சித் தொண்டர்களுக்கு உத்வேகம் தந்திருக்கிறது. அந்த நம்பிக்கையிலேயே ’நன்றி! மீண்டு வராதீர்கள்’ என்று துணிச்சலாய் உதறியது அதிமுக. “இனி எந்தத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை” என பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறார் இபிஎஸ். அந்த தைரியத்தில் பாஜகவை திண்டுக்கல் சீனிவாசன்கள், சைத்தான் ரேஞ்சுக்கு விமர்சிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
அண்ணாமலைக்கு மட்டுமன்றி பாஜக தலைமைக்கும் தமிழகத்தின் இந்த அரசியல் வேகம் புதிய அனுபவமாக இருக்கும். இதனை மீறியும், தேர்தல் அடிப்படையிலான கூட்டணி என்ற பெயரில் மக்களவைத் தேர்தலில் அணி சேர்ந்தாலும், அதிமுக தீர்மானிக்கும் சொற்ப சீட்டுகளை மட்டுமே பெற்று பாஜக திருப்தியடைய வேண்டியிருக்கும். இன்னும் இரண்டரை வருடங்களுக்கு அரசியலில் எதிர் நீச்சல் போட்டாக வேண்டியிருப்பதால் திமுகவை மட்டுமன்றி பாஜகவையும் எதிர்க்கத் துணிந்துவிட்டது அதிமுக.
கூட்டணி சிதறும் கவலையில் திமுக
தமிழகத்தில் பாஜக கூட்டணி உடைந்ததில் திமுக கூட்டணியிலும் அதிக அதிர்வுகள் எழுந்திருக்கின்றன. திமுக கூட்டணிக் கட்சியினர் முகங்களில் அர்த்தமுள்ள முறுவல் பூத்திருக்கிறது. தமிழகத்தின் இரண்டாம்கட்ட மாநில கட்சிகளுக்கு மக்களவைத் தேர்தலைவிட சட்டப்பேரவை தேர்தலே முக்கியம். இதன் அடிப்படையில் புதிதாய் எழும் பேரங்கள், மக்களவைத் தேர்தல் மட்டுமன்றி மாநிலங்களவை ஒதுக்கீடு மற்றும் 2026 சட்டப்பேரவை சீட்டு பேரம் வரை அட்வான்ஸ் புக்கிங்கில் அழுத்தமாக எதிரொலிக்கும்.
“எங்களுக்கு திமுவுடன் மட்டுமே போட்டி” என அண்ணாமலை மேடைக்கு மேடை கர்ஜித்ததை திமுக வெகுவாக ரசித்தது. திமுகவுடன் சமமாக தோள்தட்டும் அதிமுகவை, அதன் கூட்டணியில் இருந்தே அண்ணாமலை வாரியதை உள்ளூர வரவேற்றார்கள். இப்போது கூட்டணி உடைந்ததும், அதிமுக மீண்டெழுந்ததும் திமுக கவனத்தை சிதறடித்திருக்கிறது. அதனால்தான், அதிமுக - பாஜக கூட்டணி உடைந்ததை நாடகம் என்றே திமுக சாடி வருகிறது.
இப்போதைய சூழலில் பாஜக தலைமையில் மூன்றாவது அணி அமைந்தாலும் சிதறும் வாக்குகளில் யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் என்பதில் கூட்டிக்கழித்து திமுக குழம்பிப் போயிருக்கிறது. பாமக உள்ளிட்ட அடுத்தகட்ட பெரிய கட்சிகள் பாஜக தலைமையை ஏற்பதும், அவை சட்டமன்றத் தேர்தல் வரை நீடிப்பதும், திமுகவுக்கு நீடித்த பாதிப்புகளை உண்டுபண்ணக் கூடும். அல்லது அவற்றை சரிசெய்ய சீட்டு பேரத்தில் கணிசமான நட்டத்தை திமுக எதிர்கொள்ள நேரிடும்.
அண்ணாமலையின் திட்டம் என்ன?
அண்ணாமலையின் அதிரடிகள் தமிழக அரசியலில் ஆரம்பத்தில் பெரும் வரவேற்பை பெறவே செய்தன. ஆனால் பிற்பாடு, மேடை முழக்க அரசியலில் தமிழகத்தின் இன்னொரு சீமானாகி இருக்கிறார் அண்ணாமலை என பாஜக தொண்டர்களையே புலம்ப வைத்துவிட்டார்.
இதர மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தேசியக் கட்சிகள் எதிர்கொள்ளும் தமிழகத்தின் விசித்திரமான போக்கை அண்ணாமலை உள்வாங்கத் தடுமாறுகிறார். சில இடங்களில் தேசிய தலைமைக்கு இணங்காதது போன்று தனி ஆவர்த்தனம் செய்வதும், தமிழகத்தில் தன்னை மையமாகக் கொண்டு பாஜகவை வளர்க்க விரும்புவதாக குற்றச்சாட்டுக்கு ஆளாவதுமாக, அண்ணாமலையின் போக்கு சீனியர்களுக்கு எரிச்சலை உண்டாக்கவும் செய்கிறது.
டெல்லி வரை கசப்புகள் அதிகரித்தபோதும் தற்போதைய சூழலில் அண்ணாமலைக்கு இடப்பெயர்ச்சி அளிப்பது, அதிமுகவின் நெருக்கடிக்கு ஆளான தோற்றத்தை உருவாக்கும் என்பதால் அந்த முடிவை கட்சித் தலைமை ஒத்திப்போட்டிருக்கிறது.
அதிமுகவை பிளந்து தமிழக்த்தின் ஏக்நாத் ஷிண்டேவை அண்ணாமலை உருவாக்குவார் என்று எழும் புரளிகளையும், அதிமுக முகாமில் எவரும் நம்புவதாக தெரியவில்லை. மக்களவைத் தேர்தல் முடிவுகளை பொறுத்து அண்ணாமலைக்கான இடம் தீர்மானமாகக்கூடும். அதுவரை அண்ணாமலையின் திட்டம் அவருக்கு மட்டுமே வெளிச்சம்!
இதையும் வாசிக்கலாமே...
உஷார்... தமிழகத்தின் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
பிரபல கால்பந்து ஜாம்பவான் ராபர்ட் சார்ல்டன் காலமானார்! ரசிகர்கள் இரங்கல்!
பரபரப்பு… அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை!
அதிர்ச்சி... புழல் சிறையில் பெண் கைதி தூக்கிட்டு தற்கொலை!
அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி... வாக்குவாதத்தால் பரபரப்பு!