கன்னட படத்தில் நீச்சல் பயிற்சியாளர் ரோல்: அண்ணாமலையின் அடுத்த அவதாரம்!

அண்ணாமலை
அண்ணாமலை

தமிழ்நாடு பாஜக தலைவரான அண்ணாமலை, அரபி என்ற கன்னட திரைப்படத்தில் நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளார். அதன் போஸ்டர்கள் ஏற்கெனவே வெளியாகியுள்ள நிலையில், அந்த படத்திற்கான டீசர் நாளை வெளியாக உள்ளது.

இரண்டு கைகளும் இல்லாமல் சர்வதேச அளவில் நீச்சலில் சாதனைகளைப் படைத்த விஸ்வாசின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து கன்னடத்தில் அரபி என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இந்தப் படத்தில் விஸ்வாவிற்கு பயிற்சியாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நடிக்க வைக்க இயக்குநர் அணுகியிருந்தார். படத்தின் திரைக்கதை அண்ணாமலைக்குப் பிடித்துப் போகவே அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். படத்திற்குச் சம்பளமாக 1 ரூபாய் கொடுத்தால் போதும் என நிபந்தனையோடு நடித்து முடித்துக் கொடுத்துள்ளார் அண்ணாமலை.

அண்ணாமலை
அண்ணாமலை

பொறியியல் பட்டதாரி, ஐபிஎஸ் அதிகாரி, விவசாயி, அரசியல் தலைவர் என பலவேறு துறைகளில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் அண்ணாமலை ஐபிஎஸ். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாமலை, கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கல்லூரிப் படிப்பை முடித்தார். லக்னோவில் உள்ள ஐஐஎம்-ல் பட்டம் பெற்ற பிறகு ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று 2013-ல் கர்நாடக காவல் துறையில் கார்கலா ஏஎஸ்பியாக தனது முதல் பணியைத் தொடங்கினார். மாவட்ட கண்காணிப்பாளர், பெங்களூரு துணை ஆணையர் என பதவி உயர்வு பெற்றார். இவரின் அதிரடியான செயல்பாடுகள் கர்நாடக காவல்துறை வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்தன. 2019-ம் ஆண்டு காவல்துறைப் பணியை உதறிய அவர் அமைதியான வாழ்க்கையை மேற்கொள்வதற்காக சொந்த கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்யப் போவதாக அறிவித்தார். விவசாயப் பணியிலிருந்து கொண்டே, இயற்கை விவசாயம் குறித்தான தனது கருத்துக்களைப் பத்திரிகைகளில் முன்வைத்துவந்தார்.

ஆர்எஸ்எஸ் பின்னணியில் அண்ணாமலை இயங்குவதாக காத்துவாக்கில் தகவல் கசியத் தொடங்கியது. இவரின் அடுத்த அவதாரம் அரசியல்தான் எனப் பேச்சுக்கள் அடிபட்ட நிலையில் தான் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என அறிவித்தார். 2020-ல் எல்.முருகன் துணையோடு பாஜகவில் இணைந்தார். கட்சியில் இணைந்த உடனேயே 2021 சட்டமன்ற தேர்தலில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அரவக்குறிச்சி தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வியைத் தழுவினார் அண்ணாமலை. அதே ஆண்டு ஜூலை மாதம் பாஜகவின் மாநில தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுகவிற்கு எதிராக அதிரடியாகக் கருத்துக்களைத் தெரிவித்து தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பி வருகிறார் அண்ணாமலை. இதனால் அண்ணாமலைக்கு எதிராக சமூக வலைதளங்களில் திமுக ஐடி விங் மீம்ஸ்களை அள்ளி இறைத்து வருகிறார்கள். எல்லாவற்றையும் எதிர் கொண்டு அரசியலில் களம் காணும் அண்ணாமலை நடிகராக ஒரு புதிய பரிணாமத்தை அடைந்துள்ளார்.

அண்ணாமலை நடித்துள்ள படத்திற்கு தமிழகத்தில் வரவேற்பு இருக்குமா என்பது போகப் போகத்தான் தெரியும்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in