அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடிஎனக்கேத் தெரியாமல் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது:அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு!

எனக்கே தெரியாமல் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது: அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு!

சிவில் மற்றும் மெக்கானிக்கல் தமிழ் வழி பாடப்பிரிவுகள் நீக்கம் என்பது உயர்கல்வித் துறை அமைச்சராகிய எனக்கோ, உயர்கல்வித்துறை செயலாளருக்கோ தெரியாமல் அவர்களாக எடுத்த முடிவு என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், ‘’பொறியியல் பாடப்பிரிவில் தமிழ் வழியில் செயல்பட்டு வந்த இரு பாடபிரிவுகள் நீக்கபடுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து துணை வேந்தரைத் தொடர்புக் கொண்டு அந்த அறிவிப்பினை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தினேன்.

அனைத்து துணை வேந்தர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கூட, அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் பல பாடப்பிரிவுகளை தமிழ் வழியில் படிக்க ஏதுவாக ஏற்படுத்தித் தர வேண்டுமென ஆலோசனை வழங்கி இருந்தோம். அவரும் அந்த பாடப்பிரிவுகளை மொழிப் பெயர்ப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. ஆனால், இந்த அறிவிப்பு அரசுக்கே தெரியாமல் எப்படி வெளி வந்தது என்பது தெரியவில்லை.

மாணவர்களின் எண்ணிக்கை முக்கியமில்லை; நம்முடைய தாய்மொழியில் படிக்க வேண்டும் என்பதே முக்கியம். தமிழ் மொழி பாடப்பிரிவுகள் நிச்சயம் மூடப்படாது. அண்ணாமலைக் கூட சொல்கிறார், புதிய கல்விக் கொள்கையில் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் என்று இவர்கள் இப்படி பேசுவதே மாநில மொழியில் இன்னொரு மொழி புகுத்துவதற்கான வழி என்று எங்களுக்கு தெரியாமல் இல்லை.

அதிமுக ஆட்சியில் ஈபிஎஸ், சூரப்பாவிடம் என்ன பாடுபட்டார்கள் என்பது நன்றாகவே தெரியும். இந்த விவகாரத்தில் துணை வேந்தர் செய்தது தவறு என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. புதிய பாடப்பிரிவுகள் சேர்ப்பதாக இருந்தாலும் சரி, நீக்குவதாக இருந்தாலும் சரி அரசுத்துறை செயலருக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

இதனால் தான் கூறுகிறோம், துணை வேந்தர்கள் நியமனம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டு அது நடைமுறையும் படுத்தப்பட்டு வருகிறது.

அண்ணாமலைக்கு வரலாறு தெரியாது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் ஏன் மும்மொழிக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறித்து அண்ணாமலை என்னுடன் விவாதிக்க தயாரா? ஏதோ பேச வேண்டும் என்பதற்காக அவர் பேசி வருகிறார்’’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in