
சென்னை அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பொறுப்பில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராஜினமா செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 2021 செப்டம்பர் மாதத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டனர். அதன்படி சென்னை அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.
அண்ணா பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுவில் அலுவல் சாரா உறுப்பினராக மூன்று ஆண்டுகளுக்கு உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அப்போது அறிவித்திருந்தார். இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிண்டிகேட் உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ளன.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பதவியை உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா செய்துள்ளார். தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி செயல்பட்டு வருவதால் அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.