
“மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 1956-ல் முன்னாள் முதல்வர் அண்ணா கடவுளை விமர்சித்து பேசினார். முத்துராமலிங்க தேவர் அதைக் கண்டித்ததால் அண்ணா அவரிடம் மன்னிப்புக் கேட்டார்” பாஜக தலைவர் அண்ணாமலையின் இந்த பேச்சுத்தான் அதிமுக - பாஜக கூட்டணிக்கே வேட்டுவைக்கும் நிலைக்குப் போயிருக்கிறது. ஆனால், “அண்ணா மன்னிப்புக் கேட்கவும் இல்லை தேவர் அதை விரும்பவும் இல்லை” என அண்ணாமலையின் கருத்தை மறுத்திருக்கிறார் ஃபார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குறித்த வரலாற்று ஆய்வாளருமான வி.எஸ். நவமணி. உண்மையில் அன்றைக்கு என்னதான் நடந்தது என்பது குறித்து அவரிடம் பேசினோம்.
அண்ணா பேசியதாக அண்ணாமலை தெரிவித்திருக்கும் கருத்துகள் அதிமுக - பாஜக கூட்டணிக்கே பங்கம் விளைவிக்கும் அளவுக்கு போயிருக்கிறது... உண்மையில் அன்றைக்கு அண்ணா என்னதான் பேசினார்?
1956-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 4-ம் தமிழ்ச்சங்கத்தின் பொன்விழா கொண்டாடப்பட்டது. அது தொடர்பான கலை நிகழ்ச்சிகள் மதுரை தமுக்கம் மைதானத்திலும், சொற்பொழிவுகள் மீனாட்சியம்மன் கோயிலின் பிரகாரத்தின் உள்ளே இருக்கும் வடக்கு ஆடி வீதியில் நடைபெற்றது.
சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் பி.டி.ராஜன் தான் அப்போது தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்தார். சொற்பொழிவுகளின் முதல் நாள் நிகழ்ச்சியில் ராஜாஜி பேசினார். இதில் நான்காவது நாள் பி.டி.ராஜனும், 6-வது நாள் ‘சேதுபதிகளின் தமிழ்த் தொண்டு’ என்ற தலைப்பில் முத்துராமலிங்கத் தேவரும் பேசுவதாக இருந்தது. அப்போது திமுக தேர்தல் அரசியலுக்கு வராத காலம். அவர்கள் 1957-ல் தான் தேர்தல் அரசியலுக்கு வந்தார்கள். அதுவரைக்கும், ‘அடைந்தால் திராவிட நாடு... இல்லையேல் சுடுகாடு’ என்ற கொள்கையை முன்வைத்துக்கொண்டிருந்தார்கள்.
முதல்நாள் கூட்டத்தில் பேசிய ராஜாஜி, “சிவபெருமானை தென்னாட்டு கடவுள் என்று சொல்வார்கள். தமிழ்ச்சங்கத்தின் முதல் தலைவராக இருந்தவர் சிவபெருமான் என்ற வரலாறு உள்ளது. ஆதிசங்கரரும், விவேகானந்தரும் இந்தியாவை ஆன்மிக ரீதியில்தான் இணைத்தார்கள். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கலப்பில்லாத ஆரியனும், திராவிடனும் இருந்தார்கள். ஆனால் இப்போது ஆரியன், திராவிடன் என பிரிவினை பேசுகிறார்கள். இது அவசியமில்லாதது” எனப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து நான்காவது நாள் ‘மேடைத் தமிழ்’ என்ற தலைப்பில் பி.டி.ராஜன் பேசவேண்டும். ஆனால் அவர், அழைப்பிதழில் பெயர் இல்லாத அண்ணாவை அழைத்து வந்து பேசவைத்தார். அந்த காலகட்டத்தில் அண்ணாதுரைக்கு தனது பேச்சில் கேலி, கிண்டல், எள்ளல், வக்கிரம் கலந்து பேசுவது வழக்கமாக இருந்தது.
அந்த மேடையில், பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற சேலத்தைச் சேர்ந்த மணிமேகலை என்னும் சிறுமியை அண்ணா வாழ்த்திப் பேசும்போது, ”இந்தக் குழந்தை மிக அருமையாக சங்க இலக்கியப் பாடலைப் பாடினார். இதே முந்தைய காலமாக இருந்திருந்தால், இச்சிறுமி உமையம்மையின் ஞானப்பாலை அருந்தியதால்தான் இப்படி பாடமுடிந்தது என்று கதை கட்டியிருப்பார்கள்” என்று கூறி தேவாரப் பாசுரங்களை இயற்றிய திருஞானசம்பந்தரை கேலி செய்து பேசினார். அத்துடன், முதல் நாளில் பேசிய ராஜாஜியையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
அண்ணாதுரை இந்தக் கருத்தைக் முச்சந்தியில் பேசியிருந்தால் யாரும் கண்டுகொள்ளப்போவதில்லை. அவர் பேசியது தொன்மையும், 64 திருவிளையாடல்களை சிவபெருமான் நிகழ்த்திய மதுரைக் கோயில் வளாகத்தில் என்பதால் சலசலப்பை உருவாக்கியது.
இதற்கு முத்துராமலிங்கத் தேவர் ஆற்றிய எதிர்வினை என்ன?
அண்ணா பேசியதை கேள்விப்பட்ட தேவர் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். இதனால் ஆறாவது நாள் பேசவேண்டிய தேவர், ஐந்தாவது நாளே மேடைக்கு வந்தார். தமிழ்ச்சங்க தலைவராக இருந்த பி.டி.ராஜனிடம், “இன்று நான் பேசவேண்டும்” என்று கேட்டார், அவர் அதனை மறுக்கவே, அதனைப் பொருட்படுத்தாமல் மேடைக்குச் சென்றார்.
அன்று மேடையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான பி.கே.ஆர். லட்சுமிகாந்தம்மாள் தலைமை வகிக்க, சிவானந்த விஜயலட்சுமி என்பவர் சொற்பொழிவாற்ற இருந்தார். அப்போது பேசிய தேவர், “மரபுகளை மீறி மேடையைக் கைப்பற்றுவதும், ஒரு மாது தலைமையேற்றிருக்கும்போது பேசுவதும் அடியேனுக்கு இதுதான் முதலும், கடைசியும் ஆகும்.
ராஜாஜியோடு எனக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவரின் பிறப்பில் ஐயப்பாடு இருப்பதாக, இங்கே மேடையில் பேசவந்த நபரை பேசவைத்தது யார்? அவர் இக்கருத்தை கோயிலுக்கு வெளியில் பேசியிருந்தால் கேட்கப்போவதில்லை. இருக்கும் இடம் அம்மையப்பர் ஆலயம் என்பதை மறந்து, தான் ஒரு கட்சியின் தலைவன் என்பதை மறந்து, தான் கொண்ட நாத்திகக் கொள்கையை மட்டும் மறக்காமல் பேசிய இவரை மேடையேற்றி பேசவைத்தது யார்?” என்று ஒரு சுடுசொல்லை வீசினார்.
தொடர்ந்து பேசிய தேவர், “இனிமேல் இந்த விழா இக்கோயிலுக்குள் நடக்கக்கூடாது. மீனாட்சியம்மன் கோயிலில் ஆறுகால பூஜையும், 16 விதமான அபிஷேகங்களும் நடக்கிறது. இனியும் இந்த விழா கோயிலில் நடந்தால் மனித ரத்தத்தாலும் அபிஷேகம் நடத்தவும் அடியேன் தயங்கமாட்டேன்” என்றார்.
தேவர் பேசிவிட்டு வந்தவுடன் பி.டி.ராஜன் மேடைக்குச் சென்று, “நேற்று ஒரு தலைவர் இங்கே பேசினார். இன்று ஒரு தலைவர் பேசினார். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்களே புரிந்துகொள்ளுங்கள்” என்றார். அதன்பின்னர் அந்த விழாவை கோயிலுக்குள் நடத்தக்கூடாது என முடிவெடுத்து தமிழ்ச்சங்க பொன்விழா நிகழ்ச்சிகள் அரைகுறையாக நிறைவுபெற்றது.
தேவரின் பேச்சுக்கு அண்ணா எதிர்வினையாற்றினாரா?
இதற்கு அடுத்த நாள் மதுரை திலகர் திடலில் அண்ணாதுரை பேசினார். அப்போது அவர் தேவரை ஏதேனும் விமர்சித்துப் பேசுவாரோ என்று நினைத்து, தேவரின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் அந்த மைதானத்தில் கூடிவிட்டனர். இதனை உணர்ந்த அண்ணா, தேவர் குறித்து எதுவும் பேசாமல் காங்கிரஸ் குறித்து மட்டும் பேசிவிட்டுச் சென்றுவிட்டார். அதனால் இந்த விவகாரம் அத்தோடு முடிவுக்கு வந்தது.
இந்தச் சம்பவம் குறித்த ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா?
உள்ளது. ப.திருமலை என்னும் மூத்த பத்திரிகையாளர் எழுதிய ‘மதுரை அரசியல்’ என்னும் புத்தகத்தில் இச்சம்பவத்தை விவரித்துள்ளார். புகழ்பெற்ற எழுத்தாளர் நா.பார்த்தசாரதி தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் மாணவர். அவரும் இச்சம்பவத்தை அப்படியே கட்டுரையாக எழுதியிருந்தார். அக்கட்டுரை 1974-ல் கோரிப்பாளையத்தில் தேவர் சிலை திறப்பு விழா நடந்தபோது வெளியிடப்பட்ட மலரில் பிரசுரிக்கப்பட்டது.
அதுபோல பி.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை கமல தியாகராஜன் என்பவர் எழுதியுள்ளார். ‘தமிழவேள் பி.டி.ஆர். வாழ்க்கை வரலாறு’ என்ற அந்தப் புத்தகத்திலும் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக இன்னும் சில புத்தகம் மற்றும் பத்திரிகை ஆவணங்களும் என்னிடம் உள்ளன.
அண்ணாமலை பேசியபோது இவ்விவகாரத்தில் அண்ணா மன்னிப்புக் கேட்டதாகச் சொன்னாரே... அது உண்மையா?
அது உண்மையல்ல. இந்த விவகாரத்தில் மன்னிப்புக் கேட்கவேண்டும் என தேவர் கோரிக்கை வைக்கவுமில்லை. அதேபோல அண்ணாதுரை மன்னிப்பு கேட்கவுமில்லை. தேவர் அதை எதிர்பார்க்கவும் இல்லை. எனவே, அண்ணாமலை பேசியதில் ஒரு பகுதி சரி; அவ்வளவுதான். மன்னிப்புக் கேட்டார் என அண்ணாமலை சொல்வது தவறான தகவல். ஆனால் எச்.ராஜா உள்ளிட்ட சிலர் கூறுவது போல அப்போது வேறு எந்த தெய்வநிந்தனைப் பேச்சையும் அண்ணா பேசவே இல்லை.
தேவருக்கும் அண்ணாவுக்கும் இடையே அப்போது அரசியல் ரீதியான மோதல்போக்கு இருந்ததா?
அவர்களுக்கு தனிப்பட்ட மோதல் இருக்கவில்லை. ஆனால் கொள்கை ரீதியாக திமுக மற்றும் ஃபார்வர்டு பிளாக் இடையே தென்மாவட்டங்களில் கடுமையான முரண்பாடுகள் இருந்தன. கடவுள் எதிர்ப்புக் கூட்டங்களை இப்பகுதிகளில் ஃபார்வர்டு பிளாக் கட்சியினர் அப்போது நடத்தவிட்டதே இல்லை. இடதுசாரி கட்சியாக இருந்தாலும், ‘தேசியம் உடல், தெய்வீகம் உயிர்’ என்ற கொள்கையோடு இருந்தவர் முத்துராமலிங்கத் தேவர். எனவே, கொள்கை ரீதியாக இரு கட்சிகளிடையே உரசல்கள் இருந்தன.
இந்தச் சொற்பொழிவுக்குக் காரணமான தமிழ்ச்சங்கத்தின் வரலாறு என்ன?
1901-ம் ஆண்டு பாண்டித்துரை தேவரால் இந்த தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டு, 1902-ல் பதிவுசெய்யப்பட்டது. இப்போதும் அந்த சங்கம் இயங்கிக்கொண்டுள்ளது. அந்த இடத்தில் செந்தமிழ் மற்றும் கீழ்திசைக்கல்லூரி இயங்கி வருகிறது. இடையில் பி.டி.ராஜன் இச்சங்கத்தின் தலைவராக இருந்தார். இச்சம்பவத்துக்குப் பின்னர் அவர் அப்பதவியிலிருந்து விலகிவிட்டார்.
உங்களுக்கு இந்த சம்பவங்கள் குறித்து எப்படி தெரியும்?
நான் 1974 முதல் ஃபார்வர்டு பிளாக் கட்சியின் பொறுப்புகளில் உள்ளேன். 1998-லிருந்து மாநிலச் செயலாளராகவும், 2009-லிருந்து 2013 வரை மாநிலத் தலைவராகவும் இருந்துள்ளேன். எனவே தேவருடன் நெருங்கிப் பழகிய பல தலைவர்கள் என்னிடம் இதுபற்றி கூறியுள்ளனர். எனது அப்பா செல்லமுத்து தேவர், முத்துராமலிங்க தேவரின் அணுக்கமான தொண்டராக இருந்தார். அவர் பல விஷயங்களை என்னிடம் கூறியுள்ளார்.
தேவருக்குப் பின்னர் தலைவராக இருந்த சசிவர்ணத் தேவர், மூக்கையா தேவர், ஏ.ஆர்.பெருமாள் போன்ற தலைவர்களிடம் நான் பணியாற்றியுள்ளேன். 1989 -91-ல் அதிமுக எம்பி-யான பொன்.ராஜரத்தினம் என்பவர் நாடாளுமன்ற விவகாரம் குறித்து திமுக அரசை விமர்சித்துப் பேசினார். இதற்கு பதிலளித்த திமுக தலைவர் கருணாநிதி, “இந்த எம்பி போலவே மதுரையில் ஒரு தலைவர் அண்ணாவை சுடுசொல்லால் திட்டினார்” என்று குறிப்பிட்டார். கருணாநிதியே இந்த நிகழ்வு நடந்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.
அப்படி ஃபார்வர்டு பிளாக் வலுவாக இருந்த தென் மாவட்டங்களில் திமுக எப்படி காலூன்றியது?
1963-ல் தேவர் இறந்துபோகிறார். அப்போது நடந்த இரங்கல் கூட்டத்தில் பேசிய அண்ணாதுரை, “ இப்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடன் உள்ளனர். நான் ஈரோட்டில் குடியரசு பத்திரிகையில் பணியாற்றிய போது, அங்கே தேவர் பேச வருவதாகச் சொன்னார்கள். இந்த ‘தென்பாண்டி சிங்கம்’ எப்படி இருக்குமென பார்க்க கூட்டத்தோடு நானும் நின்றேன்.
அப்போது பிடரி சிலிர்க்கும் சிங்கமென, துள்ளல் நடையுடன் மேடையேறிய தேவரைக் கண்டு ‘தென்பாண்டி சிங்கம்’ என்ற பெயர் இவருக்கு சாலப் பொருந்தும் என்று உணர்ந்தேன். அப்படி சிங்கம் போல இருந்த தலைவரை, அடையாளம் தெரியாமல் தனிமை சிறையில் அடைத்து கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் நஞ்சு கொடுத்து, எலும்பும் தோலுமாக இன்று நம் கையில் கொடுத்திருக்கிறது காங்கிரஸ் அரசு.
தேவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி, வரும் தேர்தலில் காங்கிரஸை வேரோரும், வேரடி மண்ணோடும் வீழ்த்துவதுதான்” என்றார். அதற்கு முன்னர் இந்த ‘ஸ்லோ பாய்சன்’ பேச்சே இல்லை. அதன்பின்னர் தென்மாவட்டங்களில் காமராஜரை கடுமையாக திட்டி, தேவரை வாழ்த்திப் பேச ஆரம்பித்தது திமுக. இதன் பின்னர் 1967-ல் திமுகவுடன் கூட்டணியும் அமைத்தது ஃபார்வர்டு பிளாக். அதனால் ஃபார்வர்டு பிளாக்கில் திமுக எதிர்ப்பு குறைந்துபோனது. இப்படித்தான் திமுக தென் மாவட்டங்களில் நுழைந்தது.
1956-ல் இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் தேவர் - அண்ணா சந்திப்பு நடந்ததா?
இல்லை இருவரும் சந்தித்ததில்லை. 1957-ல் நடந்த முதுகுளத்தூர் கலவரம் தொடர்பாக காங்கிரஸ் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம் கொண்டுவந்தார். அப்போது நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய அண்ணா, “என்னையும், எனது இயக்கத்தையும் தேவர் மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார். நாங்கள் ஜஸ்டிஸ் கட்சியில் பணியாற்றியபோது, எங்களால் பரமக்குடியை தாண்டி அரசியல் செய்யவே முடியாது. அப்போது காங்கிரஸின் படைக்கலனாக இருந்தவர் தேவர். அப்போது தேவர் செய்தது வீரமாக, போற்றுதலுக்கு உரிய காரியமாக காங்கிரஸுக்கு இருந்தது. ஆனால் இப்போது, தேவர் செய்வது மாறுபட்டு உங்களுக்கு ரவுடித்தனமாக தெரிகிறது. தேவர் அன்றும் இதைத்தான் செய்தார், இப்போதும் அதைத்தான் செய்கிறார்” என்றார். இது சட்டபேரவை குறிப்பிலேயே இப்போதும் உள்ளது.