பொல்லாப்பைத் தேடித்தரும் பில்லா ஜெகன்!

அனிதாவின் அமைச்சர் பதவிக்கு ஆபத்து?
அனிதா ராதாகிருஷ்ணனுடன் பில்லா ஜெகன்
அனிதா ராதாகிருஷ்ணனுடன் பில்லா ஜெகன்

சமீபகாலமாகத் தன்னைச் சுற்றி நடந்துவரும் சம்பவங்களால் அரண்டுபோயிருக்கிறார், மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். அவரது ஆதரவாளர்கள் இழுத்துவரும் வம்பு வழக்குகளால், தலைமையிடமிருந்து கடும் கண்டிப்புக்கும் உள்ளாகியிருக்கிறார். ஏற்கெனவே, அமைச்சரின் உதவியாளர் கிருபாகரன் போக்குவரத்துக் காவலரைத் தாக்கிய சம்பவத்தால் கொதித்துக்கிடந்தது போலீஸ் வட்டாரம். அமைச்சர் அனிதா தலையீட்டால் வழக்கு இல்லாமல் இவ்விவகாரம் முடித்துவைக்கப்பட்ட சில நாட்களிலேயே, அரசு விருந்தினர் மாளிகைப் பணியாளரை அடித்த வழக்கில் அமைச்சரின் ஆதரவாளர் பில்லா ஜெகன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இது அனிதாவுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து, “அமைச்சர் நல்லவருதாங்க... அவரைச் சுற்றியிருக்கிறவங்க சரியில்லை” என புலம்பத் தொடங்கியுள்ளனர் உடன்பிறப்புகள்!

முதல்வருடன் பில்லா ஜெகன்
முதல்வருடன் பில்லா ஜெகன்

‘பில்லா’வான ஜெகன்

ஏற்கெனவே 2 கொலை வழக்குகள் உட்பட ஏராளமான வழக்குகளோடு, போக்கிரிப் பட்டியலிலும் இருப்பவர் பில்லா ஜெகன். இவரை வளர்த்துவிட்டதே அனிதா ராதாகிருஷ்ணன்தான். பில்லா ஜெகன் மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர். மணப்பாடு உள்ளிட்ட மீனவர் பகுதிகளில் அமைச்சர் அனிதாவுக்காக தேர்தல் வேலைசெய்தவர். அனிதாவின் நிழலில் பில்லா ஜெகன் போட்ட ஆட்டங்கள் கணக்கில் இல்லாதவை.

தூத்துக்குடி சின்னக்கடைத் தெருவைச் சேர்ந்த பில்லா ஜெகன், லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் செய்துவந்தார். இவர், தீவிர விஜய் ரசிகர். ரஜினி, அஜித் நடித்து வெவ்வெறு காலகட்டங்களில் ‘பில்லா’ திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும் அரசியலில் தான் ‘பில்லா’ போல் ஒரு டான் எனக் காட்டிக்கொள்ளவே, விஜய் ரசிகரான ஜெகன் ‘பில்லா’ எனும் அடைமொழியைச் சூட்டிக்கொண்டார். ஆரம்பத்தில், அமைச்சர் கீதாஜீவனின் தந்தை பெரியசாமியின் நிழலிலேயே அரசியல் செய்துவந்தார். ஆனால், பில்லா ஜெகனின் நடவடிக்கைகள் பிடிக்காமல் பெரியசாமி ஒருநாள், கூட்டத்தினர் மத்தியில் சத்தம்போட, அதிருப்தியடைந்தார் ஜெகன்.

அதேநேரத்தில், திமுகவில் சேர்ந்து திருச்செந்தூர் எம்எல்ஏ ஆகியிருந்தார் அனிதா ராதாகிருஷ்ணன். பெரியசாமியால் துரத்திவிடப்பட்ட பில்லா ஜெகன், அனிதாவிடம் அடைக்கலமானார். கூடவே, திருச்செந்தூர் எம்எல்ஏவான அனிதாவைத் தூத்துக்குடிக்கு அழைத்துவந்து தொடர் நிகழ்ச்சிகள் நடத்தினார். பெரியசாமி ஒரு தெருவில் கூட்டம் போட்டால், அடுத்த வாரமே அதே தெருவில் அனிதாவை அழைத்து கூட்டம் நடத்தினார் பில்லா ஜெகன். பெரியசாமியின் மறைவுக்குப் பின் தூத்துக்குடி திமுக வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இதில் வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக கீதா ஜீவனும், தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக அனிதா ராதாகிருஷ்ணனும் நியமிக்கப்பட்டனர். அனிதா மாவட்டப் பொறுப்பாளர் ஆனதும், அவர் பெயரைச் சொல்லியே பல அத்துமீறல்களிலும் ஈடுபடத் தொடங்கினார் பில்லா ஜெகன்.

அதிரவைக்கும் பின்னணி

பில்லா படிப்படியாக வளர்ந்த விதம் குறித்து, திமுக உடன்பிறப்புகள் சிலரிடம் விசாரித்தோம். அதில் கிடைத்த தகவல்கள் அதிரவைப்பவை.

பில்லா ஜெகனோடு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
பில்லா ஜெகனோடு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

“பில்லா ஜெகனின் மகளை சச்சின் எனும் வாலிபர் ஒருதலையாகக் காதலித்து வந்திருக்கிறார். இந்த விஷயம் பில்லா ஜெகனுக்குத் தெரிந்ததும், ஆண் உறுப்பை அறுத்துக் கொலை செய்யப்பட்டார் சச்சின். இதேபோல் சொத்துப் பிரச்சினையில் தனது 3-வது தம்பியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்ததாகவும் ஜெகன் மீது குற்றச்சாட்டு உண்டு. இப்படி 2 கொலை வழக்குகள் உள்பட இவர்மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதைக் காரணம்காட்டி கடந்த ஆண்டு திமுகவிலிருந்தே நீக்கப்பட்டார் பில்லா ஜெகன். ஆனால், அனிதாவின் தயவால் மீண்டும் கட்சிக்குள் வந்துவிட்டார். அதே சூட்டோடு, இவருக்குத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பதவியும் கிடைத்தது.

ஏற்கெனவே சுபாஷ் பண்ணையாருக்கும், அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் ஏழாம் பொருத்தம். கடந்த தேர்தலில் பண்ணையார் அனிதாவுக்கு எதிராக வேலைசெய்தார்; அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணனை ஆதரித்தார். அதிமுக வேட்பாளருக்காக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலரும் தேர்தல் வேலை செய்தனர். அப்போதே, விஜய் ரசிகர் மன்றத்திலும் பொறுப்பில் இருக்கும் பில்லா ஜெகன், தேர்தல் வேலை செய்யக் கூடாது என அவர்களை மிரட்டினார். இது சுபாஷ் பண்ணையார் காதுக்குப் போக, அவர் பில்லா ஜெகனிடம் இதுபற்றிப் பேசினார். ஆனால், தொலைபேசியில் இருவருக்குள்ளும் அது சண்டையாக மாறி கொலைமிரட்டல் அளவுக்குப் போய்விட்டது. தேர்தல் நேரத்தில் அதுதொடர்பான குரல் பதிவும் வைரலானது” என, பில்லா ஜெகனின் கடந்தகாலத்தை விவரிக்கின்றனர் உடன்பிறப்புகள்.

அனிதாவுடன்...
அனிதாவுடன்...

விருந்தினர் மாளிகைப் பணியாளர் மீது தாக்குதல்

சமீபத்தில், தூத்துக்குடியில் பீச் ரோடு பகுதியில் இருக்கும் பழைய சுற்றுலா மாளிகைக்குப் போயிருக்கிறார் பில்லா ஜெகன். பழைய கட்டிடமான அது, இப்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை விசாரிக்கும் ஒரு நபர் ஆணைய அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மாளிகைக்கு வந்த பில்லா ஜெகன் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. “இது இப்போது நீதிமன்றக் கட்டிடமாகச் செயல்படுவதால் உள்ளே அனுமதி இல்லை” எனச் சொல்லியிருக்கிறார், அங்கே இருந்த பணியாளர் சதாம் சேட். காரில் திமுக கொடிகட்டி வந்திருந்த பில்லா ஜெகன், “நான்தான் நீதிபதி. நான் சொல்றேன்... திறக்கமாட்டியா?” என கோபமாகப் பாய, “தாசில்தாரிடம் அனுமதி வாங்கித்தான் திறக்க முடியும்” எனச் சொல்லியிருக்கிறார் சதாம் சேட். இதனால் கோபமடைந்த பில்லா ஜெகன், அவரைத் தாக்கியிருக்கிறார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ஜெகன், 2-வது முறையாகக் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறார்.

ஏற்கெனவே, அமைச்சரின் உதவியாளர் கிருபாகரன் பட்டப்பகலில் திருச்செந்தூர் கோயில் வாசலில் வைத்து போக்குவரத்துக் காவலர் முத்துக்குமாரைப் பொதுமக்கள் முன்னிலையில் அறைந்தார். ஆனால், அந்த வழக்கு சமரசமாக முடிந்துவிட்டதால் அதிருப்தியில் இருந்த போலீஸார், பில்லா ஜெகன் மீது சூட்டோடு சூடாக வழக்குப் போட்டுள்ளனர்.

சுபாஷ் பண்ணையாரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகச் சொல்லி, திமுக ஆட்சி அமைந்ததுமே தனக்குப் போலீஸ் பாதுகாப்பு வாங்கியிருந்தார் பில்லா ஜெகன். இந்தத் தகராறுகள் அனைத்தும் இவரது பாதுகாப்புக் காவலர் சொர்ண கார்த்தி முன்னிலையில் நடந்தும், அவர் இதையெல்லாம் தடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எச்சரிக்கை விடுத்த தலைமை

இப்படித் தனது ஆதரவாளர்கள் தொடர்பாகத் தொடர்ச்சியாக வந்து விழும் புகார்கள், அனிதா ராதாகிருஷ்ணனையே நிலைகுலைய வைத்துள்ளனவாம். இதனிடையே, அனிதாவின் அமைச்சர் பதவியைப் பறிக்க வேண்டும் என சுபாஷ் பண்ணையார் தரப்பும் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளதாம்.

ஏற்கெனவே, கட்சிக்குள் அனிதாவின் நிலை அத்தனை சிலாக்கியமாக இல்லை. இந்த நிலையில், கே.என்.நேரு உள்ளிட்ட சீனியர் அமைச்சர்களும் அனிதா ராதாகிருஷ்ணனிடம் ஆதரவாளர்களின் ஆட்டத்தை அடக்கிவைக்குமாறு கறாராகச் சொல்லியிருக்கிறார்கள். இதனிடையே, அனிதாவின் அமைச்சர் பதவியை பறிப்பதற்காக தூத்துக்குடி திமுகவில் ஒரு கோஷ்டி பக்கா பிளான்போட்டு வேலைசெய்து கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

அனிதாவின் அடுத்த மூவ்?

திமுகவில் எம்எல்ஏவாக இருந்துகொண்டே, ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையானபோது பட்டாசு வெடித்தவர் அனிதா. “ஜெயலலிதா விருப்பப்பட்டால் திருச்செந்தூர் தொகுதியில் நிற்கலாம்” எனவும் பேசிப் பரபரக்க வைத்தவர். திமுகவில் தனக்கு இம்மியளவு மரியாதைக் குறைந்தபோதே, இந்த அதிரடியைச் செய்தவர் அனிதா. ஒருவேளை அமைச்சர் பதவி பறிபோனால், மீண்டும் அவர் அதிமுகவுக்குத் திரும்பவும் தயங்கமாட்டார் என்கிறார்கள் அவரது கடந்தகால அரசியல் நகர்வுகளை நன்கு அறிந்தவர்கள்.

அடக்கம் அமரருள் உய்க்கும்... என்பது வள்ளுவன் வாக்கு. இதை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தனது ஆதரவாளர்களுக்கு இனியாவது எடுத்துச்சொல்லி புரியவைத்தால் அவருக்கும் நல்லது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in