பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு: எளிதாகிறதா திரௌபதி முர்முவின் வெற்றி?

பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு: எளிதாகிறதா திரௌபதி முர்முவின் வெற்றி?

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆந்திர முதல்வர் தரப்பில் வெளியான அறிக்கையின்படி, எஸ்சி, எஸ்டி, பிசி மற்றும் சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவத்திற்கு ஜெகன்மோகன் ரெட்டி முக்கியத்துவத்தும் அளித்து வருகிறார், அதன் தொடர்ச்சியாக இந்த ஆதரவு வழங்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இந்த சமூகங்களின் மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த்துள்ளார். மேலும் இந்த சமூகங்களுக்கு 70 சதவீத பிரதிநிதித்துவத்தையும் அமைச்சரவையில் உறுதிப்படுத்தினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், முன்னதாக திட்டமிடப்பட்ட அமைச்சரவைக் கூட்டம் காரணமாக இன்று நடைபெறும் திரௌபதி முர்முவின் வேட்புமனுத் தாக்கலில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ராஜ்யசபா உறுப்பினர் விஜய்சாய் ரெட்டி, மக்களவை உறுப்பினர் மிதுன் ரெட்டி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் 48.67 சதவீத வாக்குகள் உள்ளன. அவர்களின் வெற்றிக்கு இன்னும் 2 அல்லது 3 சதவீத வாக்குகள் இருந்தால் போதுமானது என்ற சூழலில், தற்போது 4.22 சதவீத வாக்குகளை கொண்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 18-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 21-ம் தேதியும் நடைபெறும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in