`வேறு மாநிலத்திற்குச் சென்று மருத்துவம் படிப்பதில் சிக்கல்; இதை ரத்து செய்யவும்'- மத்திய அரசை வலியுறுத்தும் அன்புமணி

`வேறு மாநிலத்திற்குச் சென்று மருத்துவம் படிப்பதில் சிக்கல்; இதை ரத்து செய்யவும்'- மத்திய அரசை வலியுறுத்தும் அன்புமணி

மருத்துவக் கல்வி மாநில மொழிகளில் பயிற்றுவிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பிற்கு அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மருத்துவக் கல்வியை மாநில மொழிகளில் பயிற்றுவிக்கும் திட்டத்தின் கீழ், இந்தியில் பாடநூல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு வரவேற்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவக் கல்வியை மாநில மொழிகளில் பயிற்றுவிக்கும் திட்டத்தின் கீழ், மருத்துவப் பாட நூல்கள் இந்தியில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகத் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் மருத்துவப் பாடநூல்கள் வெளியிடப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசின் நோக்கம் நேர்மையானதாக இருந்தால் அது நிச்சயமாக வரவேற்கத்தக்கது. மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப படிப்புகளும் தமிழ்நாட்டில் தமிழில் கற்பிக்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுதியான கொள்கை ஆகும்.

தமிழக அரசுடன் இணைந்து தமிழில் தரமான மருத்துவ நூல்களைத் தயாரித்து, தாய்மொழியில் மருத்துவப் படிப்பு வழங்கப்பட்டால், தாய்மொழி வழிக்கல்வியை உறுதி செய்யும் பயணத்தில் அது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைவது உறுதி. நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அவர்களுக்குப் புரியும் மொழியில் மருத்துவர்கள் விளக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காகவே தாய்மொழி வழி கற்பித்தல் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தாய்மொழி வழி கற்பித்தலுடன் ஆங்கில வழி கற்பித்தலும் தொடரும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. இதிலும் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், மாநில மொழிகளில் மருத்துவம் பயிற்றுவிக்கும் முறை நடைமுறைக்கு வரும் போது ஒரு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள், வேறு மொழி பேசும் மாநிலத்திற்குச் சென்று மருத்துவப் படிப்பைப் படிப்பதில் சிக்கல் ஏற்படும். இச்சிக்கலுக்கு ஒரே தீர்வு மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்வதும், அந்தந்த மாநிலத்தில், அந்தந்த மாநில மாணவர்களுக்கு மட்டும் வாய்ப்பளிப்பதும் தான். எனவே, தாய்மொழி வழி மருத்துவக் கல்வி கற்பித்தல் திட்டத்திற்கு முன்னோட்டமாக அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in