எடப்பாடி பழனிசாமிக்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த அன்புமணி!

எடப்பாடி பழனிசாமிக்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த அன்புமணி!

அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாமக தலைவர் அன்புமணி முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க பொதுக் குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் வரவேற்புரை வழங்கினார். பொதுக் குழுவிற்கு அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை தாங்கி பொதுக் குழு கூட்டத்தை நடத்தினார். இதை கே.பிமுனுசாமி வழிமொழிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து 16 தீர்மானங்கள் நத்தம் விஸ்வநாதன் முன் மொழிந்தார்.

இந்தத் தீர்மானங்களை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழி மொழிந்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் தேர்தல் 4 மாதங்களில் நடத்த வேண்டும் என்றும் தேர்தல் அதிகாரிகளாக நத்தம் விஸ்வநாதன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே, அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாமக தலைவர் அன்புமணி முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், "அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக அக்கட்சியின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in