முதல்வர் ஸ்டாலினை சந்திக்க அன்புமணி தலைமையில் குழு!

பைல் படம்.
பைல் படம்.

முதல்வர் ஸ்டாலினை சந்திக்க மருத்துவர் அன்புமணி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக பாமக அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமை வகித்தார். மருத்துவர் அன்புமணி எம்.பி, மாநில தலைவர் ஜி.கே.மணி, பு.தா.அருள் மொழி, வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: வன்னியர்களுக்கு 10.50 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கிய சட்டம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை அளித்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. இந்தத் தீர்ப்பை சமூக நீதிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாக பாமக கருதுகிறது. இதை தமிழக அரசு சரி செய்ய வேண்டும் என்றும் இக்கூட்டம் கோருகிறது.

வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தினரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான புள்ளி விவரங்கள் தமிழக அரசிடம் உள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மூலம் தொகுத்து ஆய்வு செய்து அவற்றின் அடிப்படையில் வன்னியர் உள் இடஒதுக்கீட்டுக்கான பரிந்துரை அறிக்கையைப் பெற வேண்டும்.

அதன் அடிப்படையில் புதிய வன்னியர் இடஒதுக்கீட்டு சட்ட முன் வரைவை மிக விரைவாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்துவதற்காக மருத்துவர் அன்புமணி தலைமையில் 7 பேர் கொண்ட சமூகநீதிக் குழு அமைக்கப்படுகிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in