
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சந்தித்து பேசியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த நிலையில் அதற்குச் சற்று முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமைச் செயலகம் வந்து முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது அறையில் சந்தித்துப் பேசினார். அவருடன் பாமக கவுரவத் தலைவர் ஜி கே மணி, வழக்கறிஞர் பாலு, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டவர்களும் வந்திருந்தனர்.
கடந்த அதிமுக ஆட்சியின்போது நிறைவேற்றப்பட்ட வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என்று அப்போது முதல்வரிடம் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியதாக தெரிகிறது.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், "கடந்த அதிமுக ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீடு திமுக ஆட்சியிலும் உறுதி செய்யப்பட்டது. அதனை தரவுகளின் அடிப்படையில் நிறைவேற்றலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. தமிழகத்தில் அதற்காக அமைக்கப்பட்ட ஆணையம் ஒன்பது மாதங்களைக் கடந்த பின்னரும் இன்னும் எந்தவித பரிந்துரைகளையும் தமிழக அரசுக்கு செய்யவில்லை.
வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தமிழ்நாடு முதல்வருக்கு பத்து முறை தொலைபேசியில் பேசியுள்ளார். ஆறு முறை கடிதங்கள் அனுப்பியுள்ளார். தமிழக அரசு இந்த சட்டத்தை கொண்டு வருவார்களா என்பது சந்தேகமாக இருக்கிறது. எனவே தான், நடப்பு கூட்டத் தொடரிலேயே இதை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வரை சந்தித்து வலியுறுத்தி இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.