மின்வாரியத்தில் ரூ.1.58 லட்சம் கோடி கடன்; தமிழக அரசின் ஊழலே காரணம் - அன்புமணி குற்றச்சாட்டு!

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

தமிழக மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள 1.58 லட்சம் கோடி ரூபாய் கடனுக்கு அரசின் ஊழலே காரணம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

தருமபுரி மாவட்டத்துக்குக் காவிரி உபரிநீரைக் கொண்டு வர வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சோலைக்கொட்டாய் பகுதியில் பயணம் செய்த போது செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ், “காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த பாமக பல ஆண்டுகளாக போராடி வருகிறது. இத்திட்டத்தை அப்போதைய முதல்வர் பழனிசாமியும் செயல்படுத்தவில்லை. கடந்த சட்டசபைத் தேர்தலில் இத்திட்டத்துக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற திமுகவும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. நேற்று வரை, 180 டி.எம்.சி. காவிரி நீர் கடலில் கலந்துள்ளது. இதற்காக பாமக தொடர்ந்து போராடும்.

இந்திய அளவில் அதிக நேரடி கடன் பெற்ற மாநிலத்தில் ஒன்றாகத் தமிழகம் உள்ளது. இதற்காக 97,000 கோடி ரூபாய் வட்டியாகச் செலுத்தி வருகிறது. தமிழக மின் வாரியத்தில் ரூ.1.58 லட்சம் கோடி ரூபாய்க் கடன் ஏற்பட்டுள்ளதற்கு தமிழக அரசு செய்த ஊழல்களே காரணம். தற்போது தேர்தல் வாக்குறுதியில் இலவசம் தேவையா என்பது பேசு பொருளாக உள்ளது. கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற வளர்ச்சிக்கான இலவச அறிவிப்புகள் தேவை. ஓட்டுக்கான இலவச மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட இலவசங்கள் தேவையில்லை. ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் 80க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதைத் தடை செய்யாமல் தமிழக அரசு தொடர்ந்து வேடிக்கை பார்த்து வருகிறது” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in