`நடிகர்களுக்கு இது தெரிகிறதா, தெரியலையா?'- அன்புமணி கொந்தளிக்க என்ன காரணம்?

`நடிகர்களுக்கு இது தெரிகிறதா, தெரியலையா?'- அன்புமணி கொந்தளிக்க என்ன காரணம்?

“நடிகர்கள் தெரிந்தேதான் ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடிக்கிறார்கள். இதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் நாசமாகிப்போயுள்ளன” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றின் போது பேசிய அன்புமணி ராமதாஸ், “ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய வேண்டுமென்று பலமுறை நாங்கள் போராட்டம் நடத்தி வந்திருக்கிறோம். எங்களுடைய கோரிக்கையை ஏற்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர சட்டம் கொண்டுவந்து ஆன்லைன் ரம்மியைத் தடை செய்தார். ஆனால், உச்சநீதிமன்றம் இந்த அவசர சட்டத்திற்குத் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து நாங்கள் ஆன்லைன் ரம்மிக்கு எதிராக போராட்டம் நடத்தினோம். இதனையடுத்து தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஆன்லைன் ரம்மி குறித்து ஆய்வு செய்யக் குழு ஒன்றை அமைத்தது. ‘ஆன்லைன் ரம்மி திறன் சார்ந்தது கிடையாது; அதிஷ்டம் சார்ந்தது. இதைத் தடை செய்ய வேண்டும்’ என அந்த குழு பரிந்துரை செய்துள்ளது.

மேலும் முதல்வர் தலைமையில் இது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டது என நாங்கள் நம்பி இருந்தோம். ஆனால் அது சம்பந்தமாக எந்த செய்தியும் தற்போது வரை வெளிவரவில்லை. தமிழக அரசு ஆன்லைன் ரம்மி குறித்து தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்.

நடிகர்களும், பிரபலங்களும் ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடிக்கிறார்கள். இதனால் லட்சக் கணக்கான குடும்பங்கள் நாசமாகிக் கொண்டிருக்கின்றன. அது அவர்களுக்குத் தெரிகிறதா, தெரியலையா என்பது தெரியவில்லை. நிச்சயமாகத் தெரிந்துதான் அவர்கள் விளம்பரங்களில் நடிக்கிறார்கள். பணத்திற்காக எந்த விளம்பரத்திலும் நடிக்கலாமா? அவசர சட்டம் ரத்து செய்த காலத்தில் தமிழகத்தில் மட்டும் ஒரு பெண் உட்பட 24 இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in